அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பெரும் பகுதியை 'பெர்ன்' (Fern) என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ராட்சத பனிப்புயல் தாக்கி வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் காலியாகி வருகின்றனவாம்.
சுமார் 23 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த மோசமான வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். டெக்சாஸ் முதல் நியூயார்க் வரை பல மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் ஐஸ் மழை பெய்து வருகிறது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து டெக்சாஸ், ஜார்ஜியா, வர்ஜீனியா, நியூயார்க் உட்பட சுமார் 16 மாநிலங்களில் 'அவசரநிலை' (State of Emergency) அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டியிருக்கும் என்பதால், மக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய பொருட்களை வாங்கக் குவிந்தனர். இதனால் டெக்சாஸ் போன்ற இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பால், முட்டை, ரொட்டி போன்ற பொருட்கள் தீர்ந்து போய் அலமாரிகள் காலியாகக் காணப்படுகின்றன.
கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான பார்வைத்திறன் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டல்லாஸ் மற்றும் அட்லாண்டா போன்ற முக்கிய விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சில மாநிலங்களில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய குளிர் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மரங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது பனி படிந்து அவை அறுந்து விழுவதால், பல லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அமெரிக்காவின் பாதி மக்கள் தொகையை இந்தப் பனிப்புயல் நிலைகுலையச் செய்துள்ளது. மீட்புப் பணிகளுக்காகத் தேசிய பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.