டிரம்ப் புலம்பல்.. இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதாம்.. அதனாலதான் வரியாம்!

Su.tha Arivalagan
Sep 02, 2025,06:11 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு ஒருதலைப்பட்சமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 


இந்தியா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க முன்வந்தும், அது தாமதமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை வாங்குவதாகவும், அமெரிக்காவிடம் இருந்து குறைவாகவே வாங்குவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 


சீனாவில் நடந்த SCO மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த சில மணி நேரங்களில் ட்ரம்ப் இந்த கருத்தை கூறியுள்ளார்.  இதனால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கா விதித்த 50% வரி காரணமாக ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தியாவுடான வர்த்தகம் குறித்து டிரம்ப் கூறுகையில், இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு. இந்தியா அமெரிக்க பொருட்களின் மீது விதிக்கும் வரியை குறைக்க முன்வந்துள்ளது. ஆனால், அது மிகவும் தாமதமாகிவிட்டது. இந்தியாவின் அதிகப்படியான வரி விதிப்பு காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய முடியவில்லை. இந்தியாவோடு நாம் குறைவாகவே வியாபாரம் செய்கிறோம். ஆனால், அவர்கள் நம்மிடம் நிறைய பொருட்களை விற்கிறார்கள். அவர்கள் நம்மை ஒரு பெரிய வாடிக்கையாளராக கருதுகிறார்கள். ஆனால், நாம் அவர்களுக்கு குறைவாகவே விற்கிறோம். இது பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக உள்ளது. ஏனென்றால், இந்தியா அதிக வரி விதித்தது. அதனால், நம் நிறுவனங்கள் இந்தியாவில் விற்க முடியவில்லை. இது ஒருதலைப்பட்சமான பேரழிவு. 


இந்தியா தனது எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. அமெரிக்காவிடம் இருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. இப்போது அவர்கள் வரியை குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால், அது தாமதமாகிவிட்டது. அவர்கள் இதை முன்பே செய்திருக்க வேண்டும். இது சில எளிய உண்மைகள், மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.


ட்ரம்ப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ட்ரம்ப் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.