இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே தான்தான் சமரசம் செய்து வைத்ததாகவும், சமரசத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் இரு நாடுகளுக்கும் 200 சதவீதம் வரி விதிப்பேன் என்று மிரட்டியதால்தான் இரு நாடுகளும் பணிந்து வந்ததாகவும் மீண்டும் ஒரு முறை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஆபரேஷன் சிந்தூர் மோதலின்போது 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெற்காசியாவில் அணுசக்தி பலம் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதல் என்பது உலக நாடுகளின் கவனத்தை எப்போதும் ஈர்க்கும் ஒரு விஷயம். 2025-26 காலகட்டத்தில் ஏற்பட்ட போர்ச் சூழலைத் தணிப்பதில், அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிடாமல், பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுத்ததாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
தான் இரு நாடுகளும் மிரட்டியதாகவும், இரு நாடுகளும் வரி விதிப்புக்குப் பயந்தே போரை நிறுத்தியதாகவும் அவர் கூறி வருகிறார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனாலும் டிரம்ப் தான் கூறுவதை நிறுத்துவதாக இல்லை.
தற்போது மீண்டும் ஒருமுறை இதுதொடர்பாக பேசியுள்ளார் டிரம்ப். அமைதி வாரியக் கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, 2025-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டபோது, நான் தலையிட்டேன். இரு நாடுகளும் போரை நிறுத்தவில்லை என்றால், அவற்றின் மீது 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தேன். இந்த அச்சுறுத்தலுக்குப் பிறகே இரு நாடுகளும் அமைதிக்குச் சம்மதித்தன. இரு நாடுகளின் மோதலின்போது 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன (முன்பு 5 போர் விமானங்கள் என்று கூறியிருந்தார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது) என்றார் அதிபர் டிரம்ப்.
டிரம்ப்பின் இந்த புதிய பாணி ராஜதந்திரம் சர்வதேச அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதேசமயம், போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது தொடர்பாக அவர் முன்னுக்குப் பின் முரணாக தொடர்ந்து பேசி வருகிறார். போரின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் குறித்து ட்ரம்ப் தெரிவிக்கும் தகவல்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இது அவரது கூற்றின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆரம்பத்தில் 5 விமானங்கள் என்று சொன்னவர், பிறகு 7 மற்றும் 8 என மாற்றினார். தற்போது அந்த எண்ணிக்கையை 11 போர் விமானங்கள் என உயர்த்திப் பேசுகிறார். சுய தம்பட்டத்திற்காக அவர் கையாளும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அமெரிக்கா எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்தாலும், இந்தியா தனது எல்லைப் பிரச்சனைகளில் பிற நாடுகளின் தலையீட்டை விரும்புவதில்லை. எங்கள் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறது.
அதிபர் ட்ரம்ப்பின் அணுகுமுறை உலக நாடுகளிடையே பெரும் சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. வரி விதிப்பை அவர் ஒரு உத்தியாகவே பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் இணக்கமான வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த உத்தியை அவர் ஒரு வர்த்தக ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.