விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?

Su.tha Arivalagan
Sep 04, 2025,04:31 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிப்பதாக கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் நேரடி பேச்சுவார்த்தை நடத்த இன்னும் சரியான நேரம் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 


CBS தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தான் இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும், புடின் மற்றும் ஜெலென்ஸ்கியுடன் பேசியதாகவும் டிரம்ப் கூறினார். ஏதோ நடக்கப் போகிறது. ஆனால் அவர்கள் இன்னும் தயாராக இல்லை. ஆனால் ஏதோ நடக்கும். அதை நாங்கள் செய்து முடிப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான தனது அணுகுமுறை யதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் நம்பிக்கையூட்டுவதாகவும் இருப்பதாக டிரம்ப் கூறினார். 




கடந்த மாதம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த ரத்தக்களரி தன்னை disturb செய்வதாக கூறிய டிரம்ப், பொறுமை அவசியம் என்றும் வலியுறுத்தினார். ரஷ்யாவுடனான பிரச்சினை மற்ற பிரச்சினைகளை விட சற்று கடினமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் பெய்ஜிங்கில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் இந்த கருத்துக்களை தெரிவித்தார். 


டிரம்ப் சமீப காலமாக பல்வேறு நாடுகளுக்கு இடையிலான மோதல்களில் தலையிட்டு வருகிறார். தான்தான் அவர்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறிக் கொள்கிறார். இப்படித்தான் இந்தியா பாகி்தான் மோதலை தான் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அதை இந்தியா தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வந்தது. இருந்தாலும் டிரம்ப் அதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேல்-ஈரான், ருவாண்டா-காங்கோ, அர்மீனியா-அஜர்பைஜான், செர்பியா-கொசோவோ போன்ற பல சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். நோபல் அமைதிப் பரிசைக் குறி வைத்தே டிரம்ப் இது போல  செயல்படுவதாக ஒரு பேச்சும் உள்ளது. அதை டிரம்ப்பே கூட உறுதிப்படுத்தியுள்ளார். எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.