ஏம்ப்பா முகம்மது.. ராத்திரி தூங்குவியா மாட்டியா.. சவுதி இளவரசரை வியந்து பாராட்டிய டொனால்ட் டிரம்ப்!
ரியாத்: சவுதி அரேபியாவின் அபரிமிதமான மாற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டிப் பேசியுள்ளார். அதுவும் சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானை ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மிகவும் வியந்து பாராட்டி அவர் வாழ்த்தியது பலரையும் கவர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அங்கு சவூதி அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களை அவர் மேற்கொண்டார். தலைநகர் ரியாத்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இளவரசர் முகம்மது பின் சல்மானை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
டிரம்ப் பேசுகையில், முகமது, நீங்கள் இரவில் உறங்குகிறீர்களா? எப்படி உறங்குகிறீர்கள்? என்ன ஒரு வேலை. எங்களில் சிலரைப் போல் இரவெல்லாம் புரண்டு படுக்கிறீர்களா? எப்படி இதை மேம்படுத்தலாம்? என்று சிந்திப்பவர்கள்தான், அதே சிந்தனையில் இருப்பவர்கள்தான் இரவெல்லாம் புரண்டு படுப்பார்கள். புரண்டு படுக்காதவர்கள், ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள்.
விமர்சகர்கள் சவுதியின் வளர்ச்சி சாத்தியமா என்று சந்தேகப்பட்டனர், ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில், சவுதி அரேபியா விமர்சகர்களை முற்றிலும் தவறென்று நிரூபித்துள்ளது... எனக்கு சல்மானை மிகவும் பிடிக்கும். அவர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார், அருமையாக உழைக்கிறார் என்றார் டிரம்ப்.
அமெரிக்காவுக்கும், சவூதி அரேபியாவுக்கும் நீண்ட காலமாக மிக நெருங்கிய உறவு, நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜோ பைடன் காலத்தில் இது லேசான உராய்வைக் கண்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த உறவை வலுப்படுத்தும் வகையில் டிரம்ப்பின் பேச்சு அமைந்துள்ளது. 2வது முறை அதிபரான பின்னர் சவூதிக்கு முதல் வெளிநாட்டுப் பயணமாக டிரம்ப் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.