ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய்யை வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். குறிப்பாக இந்தியா பாகிஸ்தானை வைத்து அவர் மிகப் பெரிய அரசியல் செய்து வருகிறார். இரு நாடுகளின் மோதலை தான்தான் நிறுத்தியதாகவும், மோதலை நிறுத்தாவிட்டால் வரி விதிப்பேன், வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று தான் மிரட்டியதாகவும், இதைக் கேட்டு இரு நாடுகளும் பயந்து போய் தன்னிடம் வந்து போரை நிறுத்துவதாக கூறியதாகவும் டிரம்ப் பேசி வருகிறார். இதுகுறித்து இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தாலும் கூட, டிரம்ப் தனது வாயை மூடுவதாக இல்லை.
இந்த நிலையில் மேலும் ஒரு பரபரப்பைக் கிளப்பியுள்ளார் டிரம்ப். வெள்ளை மாளிகையில் அவர் பேட்டி அளித்தபோது, இந்தியா, இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்காது என்று கூறியுள்ளார் டிரம்ப். பிரதமர் மோடி இதுதொடர்பாக தனக்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் பேசுகையில், அவர் (பிரதமர் நரேந்திர மோடி) இன்று எனக்கு உறுதியளித்தார், அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள். இது ஒரு பெரிய நடவடிக்கை. சீனாவுக்கும் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி எனது நண்பர். எரிசக்தி கொள்கையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நெருங்கிய கூட்டாளி. எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், ட்ரம்ப் விதிக்கும் நிபந்தனைகளை பிரதமர் மோடி தொடர்ந்து அனுமதிக்கிறார். காசா ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளார் பிரதமர். அமெரிக்காவுக்கான ஆபரேஷன் சிந்துர் குறித்து ட்ரம்ப் கூறியதை பிரதமர் மோடி மறுக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை brokering செய்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறியதை பிரதமர் மோடி மறுக்கவில்லை என்றார் அவர்.