நானே வெனிசூலாவின் தற்காலிக அதிபர்.. டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 12, 2026,10:23 AM IST

வாஷிங்டன்: வெனிசூலா நாட்டின் தற்காலிக அதிபராக நான் இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11, 2026) அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது அதிபர் என்ற அடையாளத்துடன், ஜனவரி 2026 முதல் பதவியில் இருப்பவர் எனும் குறிப்போடு வெனிசுலா நாட்டின் தலைவராகவும் அவர் தன்னை முன்னிறுத்தியுள்ளார். இது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




ஜனவரி 3ம் தேதி, தென் அமெரிக்காவின் எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள் ஒரு துணிச்சலான நள்ளிரவுத் தாக்குதல் மூலம் சிறைபிடித்து அந்நாட்டை விட்டு வெளியேற்றின. பல மாதங்களாக நீடித்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் உச்சகட்டமாக இந்த ராணுவ நடவடிக்கை அரங்கேறியது.


இதைத் தொடர்ந்து வெனிசூலாவை தனது கட்டுக்குள் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. அங்கு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது தன்னை வெனிசூலாவின் தற்காலிக அதிபராக டிரம்ப் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் கூறுகையில், வெனிசுலாவின் தலைநகரான கராகஸை தற்காலிகமாக அமெரிக்க அரசாங்கமே நிர்வகிக்கும். வெனிசுலாவின் அபரிமிதமான கச்சா எண்ணெய் இருப்புகளைப் பயன்படுத்தி, உலக நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


ஒரு பாதுகாப்பான மற்றும் முறையான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, நாங்களே இந்த நாட்டை வழிநடத்துவோம். அமெரிக்க வல்லமையின் பிரம்மாண்டமான வெளிப்பாடு இது என்றார் டிரம்ப்.


மதுரோ கைதைத் தொடர்ந்து வெனிசூலாவின் புதிய அதிபராக, துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுள்ளார். ஆனால் நானே அதிபர் என்று டிரம்ப் கூறியுள்ளது எரியும் தீயில் நெய்யை ஊற்றுவது போல உள்ளது. டிரம்ப்பின் அறிவிப்புக்கு இன்னொரு காரணம் கூறப்படுகிறது. அதாவது புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி, மதுரோவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மதுரோவே நாட்டின் உண்மையான தலைவர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்காவிற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுதான் டிரம்ப்பை கோபத்துக்குள்ளாக்கியதாக கருதப்படுகிறது.