ஒபாமாவைக் கைது செய்வது போன்ற.. ஏஐ போட்டோவை வெளியிட்டு.. பரபரப்பை ஏற்படுத்திய டிரம்ப்

Su.tha Arivalagan
Jul 21, 2025,10:24 AM IST

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைக் கைது செய்வது போலவும், சிறையில் சீருடையில் அடைக்கப்பட்டிருப்பதைப் போலவும் போலியான ஏஐ புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பராக் ஒபாமாவை FBI அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் கைது செய்வது போல செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் இருந்தன. மேலும் கைதி சீருடையில் ஒபாமா சிறையில் இருப்பது போலவும் அதில் காட்சி உள்ளது. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் வெளியான இந்த வீடியோ, "அதிபர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்" என்று ஒபாமா கூறுவதிலிருந்து தொடங்குகிறது. அதன் பிறகு, அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் "சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை" என்று வருகிறது. அதைத் தொடர்ந்து, ஒபாமா அதிபராக இருந்த அதே அலுவலகத்தில், இரண்டு FBI அதிகாரிகளால் கைவிலங்கு பூட்டப்படுவது போன்ற AI காட்சிகள் வருகின்றன. இந்த "கைது" நடக்கும் போது டிரம்ப் அமர்ந்து சிரிப்பதைப் போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.


இந்த போலி வீடியோவின் முடிவில், ஒபாமா சிறையில் ஆரஞ்சு நிற கைதி உடையுடன் நிற்பது போலவும் காட்டப்படுகிறது.


இந்த போலியான ஏஐ வீடியோ கடும் கண்டனங்களை சந்தித்துள்ளது. அதிபர் டிரம்ப் பொறுப்பற்ற முறையில் இதை வெளியிட்டுள்ளதாக விமர்சகர்கள் கண்டித்துள்ளனர்.  அதேசமயம், டிரம்ப் ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.