8 போர்களை நிறுத்திய நான் தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன்.. மீண்டும் டிரம்ப் பொறுமல்
வாஷிங்டன்: 8 மாதங்களில் எட்டு போரை நான் நிறுத்தியுள்ளேன். நோபல் பரிசுக்கு நான் தான் தகுதியானவன். அதேசமயம், அது கிடைக்காமல் போனதற்காக நான் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
மேலும் மீண்டும் ஒரு முறை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் டிரம்ப் விடாமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதைச் சொல்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் அவர்களிடையே பேசும்போது கூறியதாவது:
இந்த ஆண்டு ஜனவரியில் அதிபராகப் பதவி ஏற்றதிலிருந்து எட்டுப் போர்களை நிறுத்தியுள்ளேன். ஒரு அதிபர் கூட ஒரு போரைக் கூட நிறுத்தியதாக நான் நினைக்கவில்லை. ஆனால், நான் எட்டு மாதங்களில் எட்டுப் போர்களை நிறுத்தியுள்ளேன். எனக்கு நோபல் பரிசு கிடைத்ததா? இல்லை. நம்ப முடிகிறதா? அது நடக்கவே முடியாத காரியம்' என்று நானே சொன்னேன். ஆனால், அடுத்த ஆண்டு எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். எது முக்கியம் தெரியுமா? நான் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன். அதுதான் முக்கியமானது.
நாங்கள் இந்த போர்கள் பலவற்றை வர்த்தக ஒப்பந்தங்களை வைத்து நிறுத்தியுள்ளோம். உதாரணத்திற்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்தது. ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. நான் அவர்கள் இருவரிடமும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது அவர்களிடம், 'நீங்கள் இந்தச் சண்டையை நிறுத்தினால் மட்டுமே நாங்கள் வர்த்தக ஒப்பந்தம் செய்வோம்' என்று கூறினேன்.
நான் இரு நாட்டுத் தலைவர்களையும் (பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்) தொலைபேசியில் அழைத்தேன். 'கேளுங்கள், நீங்கள் இந்தப் போரை நிறுத்தவில்லை என்றால், அமெரிக்காவிற்கு நீங்கள் விற்கும் எந்தப் பொருளுக்கும் 200% சுங்க வரியைப் போடுவோம். இது இரண்டு அணு ஆயுத நாடுகள் என்பதால், நான் இதற்கு உடந்தையாக இருக்க மாட்டேன் என்று மிரட்டினேன்.
மறுநாளே, இரு நாடுகளும் மோதலைத் தணிக்க முடிவு செய்ததாகத் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் சண்டையிட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம் என்று அவர்கள் கூறினார்கள். போர்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவே சுங்க வரிகளைப் பயன்படுத்த விரும்புகிறேன். எனக்குப் போர்களை நிறுத்துவது மிகவும் பிடிக்கும் என்றார் டிரம்ப்.