அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவுக்கு வருகை.. டெல்லியில் சிறப்பு வரவேற்பு!

Su.tha Arivalagan
Apr 21, 2025,11:19 AM IST

டெல்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வான்ஸுக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.


மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இவான்ஸை வரவேற்றார். இவான்ஸுடன் அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் 3 குழந்தைகளும் வந்துள்ளனர். இந்திய பாணி கலாச்சார நடனம் உள்ளிட்டவற்றுடன் வான்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப் பார்த்து வான்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். வான்ஸின் இரு குழந்தைகளும் இந்தியா பாணியில் உடை அணிந்திருந்தனர். வான்ஸின் மனைவி உஷா இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்பது நினைவிருக்கலாம்.


ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை வான்ஸ் இந்தியாவில் இருப்பார். இன்று அவர் பிரதமர் நரேந்திர  மோடியை சந்திக்கவுள்ளார். மாலை ஆறரை மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இரவு, வான்ஸ் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்துக் கெளரவிக்கவுள்ளார்.  இந்த சந்திப்பின்போது இரு தரப்பு விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.




வான்ஸ் தனது இந்தியப் பயணத்தின்போது ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குச் செல்லவுள்ளார். ஜெய்ப்பூருக்கு நாளை செல்கிறார். 23ம் தேதி ஆக்ரா பயணம் மேற்கொள்கிறார். 24ம் தேதி மாலை 6.40 மணிக்கு அவர் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வார்.


இந்தியா - அமெரிக்கா இடையே சட்டவிரோத குடியேற்றப் பிரச்சினை, வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு சலசலப்புகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் வான்ஸின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவுகளை, குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் உத்திகள் போன்ற துறைகளில் வலுப்படுத்துவதாகும். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் நடத்தும் பேச்சுவார்த்தைகள் இந்த பயணத்தின் முக்கிய அம்சமாகும். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உறுதிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இது இரு நாடுகளும் தங்கள் பொருளாதார உறவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


உலகளாவிய வர்த்தக பதட்டங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் இப்பயணம் நடைபெறுகிறது, மேலும் அமெரிக்கா இந்தியாவைப் போன்ற வலுவான நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. சுருக்கமாக, இந்த பயணம் உயர் மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளையும் கலாச்சார பரிமாற்றத்தையும் ஒருங்கிணைக்கிறது, இது அமெரிக்கா-இந்தியா உறவின் பல பரிமாண தன்மையை காட்டும் என்று நம்பலாம்.