மியாமி ஜி 20 மாநாடு.. தென் ஆப்பிரிக்க அழைக்கப்படாது.. அமெரிக்கா முடிவு!

Su.tha Arivalagan
Nov 28, 2025,01:02 PM IST
- கலைவாணி கோபால்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மியாமி நகரில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்கு தென் ஆப்பிரிக்காவை அழைக்க மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார மாநாட்டு கூட்டமான ஜி 20 உச்சி மாநாடு அடுத்த ஆண்டு மியாமி நகரில் நடைபெற உள்ளது  
இந்த உச்சி மாநாட்டிற்கு  தென்னாப்பிரிக்கா அழைக்கப்பட மாட்டாது என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு காரணம் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில், அடுத்த மாநாட்டுக்கான தலைவர் பதவிப் பொறுப்பை, அமெரிக்க தூதராக பிரதநிதியிடம் ஒப்படைக்க தென்னாப்பிரிக்கா மறுத்து விட்டதே காரணம்.

சாதாரண தூதகரக அதிகாரியை அனுப்பி பொறுப்பை ஒப்படைக்கச் சொல்வது எங்களது அதிபரை அவமதிக்கும் செயல் என்று தென் ஆப்பிரிக்கா விளக்கியிருந்தது. 



தென் ஆப்பிரிக்காவில் நடந்த மாநாட்டிற்கு அமெரிக்கா அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதில் பங்கேற்காமல் புறக்கணித்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனத்தவர்களுக்கு எதிராக கருப்பர் இன தென் ஆப்பிரிக்க அரசு இனவெறியுடன் நடப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால்தான் அவர் மாநாட்டிற்கு வரவில்லை. டிரம்ப் வராத காரணத்தால் அவருக்குப் பதில் தூதரக அதிகாரியிடம் பொறுப்பை வழங்க அமெரிக்க அரசு கேட்டிருந்தது. ஆனால் அதை தென் ஆப்பிரிக்கா நிராகரித்து விட்டது.

இதனால் கடுப்பான டிரம்ப், மியாமி மாநாட்டிற்கு தென் ஆப்பிரிக்காவை அழைக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசே வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான நட்புறவை மீட்டெடுப்பதில் தென்ஆப்பிரிக்கா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மியாமி நகரில் உள்ள தனது கோல்ப் கிளப் அமைந்துள்ள டோரல் என்ற இடத்தில் ஜி20 மாநாடு நடைபெறும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)