உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

Su.tha Arivalagan
Aug 20, 2026,09:49 AM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் 10 வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்திய கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரவிகுமார் திவாகரின் நீதிமன்றத்திலிருந்து சுமார் 100 கொலை வழக்குகள் மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


முசாஃபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வரும் ரவிகுமார் திவாகர். இவரது தீர்ப்புகள் சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.


ஏப்ரல் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 4 மாத காலகட்டத்தில் 1999 முதல் 2019 வரை நடைபெற்ற 10 வெவ்வேறு கொலை வழக்குகளில் மொத்தம் 22 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவை அனைத்தும் மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகள் என்ற பிரிவின் கீழ் தண்டனைக்குட்படுத்தப்பட்டன.




நீதிபதி திவாகர் தொடர்ச்சியாக மரண தண்டனை வழங்கி வந்ததால் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புள்ளவர்களுக்கு பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரமோத் தியாகியும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில் தற்போது மாவட்ட அமர்வு நீதிபதி வீரேந்திர குமார் சிங் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 

மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வீரேந்திர குமார் சிங் பிறப்பித்த உத்தரவின்படி, நீதிபதி ரவிகுமார் திவாகரின் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனைக்குரிய தீவிர குற்றங்கள் தொடர்பான சுமார் 100 கொலை வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.


நீதிபதி ரவிகுமார் திவாகர் முன்பு வாரணாசியில் பணியாற்றியபோது, ஞானவாபி வளாகத்தில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு நாடு முழுவதும் கவனம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.