2 மனைவி.. வாரத்துல ஆளுக்கு 3 நாள்... ஞாயிற்றுக்கிழமை லீவு.. டைம்டேபிள் எப்பூடி!

Su.tha Arivalagan
Jan 30, 2026,11:55 AM IST

ராம்பூர்: உத்தரப் பிரதேத மாநில பஞ்சாயத்தில் கொடுக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு அந்த மாநிலத்தையே கலகலப்பாக்கியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் ஒரு வினோதமான பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கு. ஒரு மனுஷனுக்கு ரெண்டு பொண்டாட்டிங்க இருந்தா என்ன நடக்கும்? "ஒரே வீட்டில் இரண்டு கிளி" கதையா இருக்கும்னு நினைச்சா, இங்க நிலைமை வேற!


குற்றம்.. ஸாரி.. (கல்யாணத்துக்குப் பிறகு) நடந்தது என்ன? 


நம்ம ஹீரோவுக்கு ரெண்டு மனைவிகள். ஒருத்தர் அரேஞ்சுடு மேரேஜ், வீட்டுல பார்த்து செஞ்சு வச்சது, இன்னொருத்தர், லவ் மேரேஜ், மன்மதன் மனசுக்குப் பிடிச்சு அவராகப் பண்ணிக்கிட்டது. தனது கணவரின் 2வது திருமணம், முதல் மனைவிக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கணவருடன் சண்டைக்குப் போனார். அவரோ, எனக்கு நீயும் வேணும் என்று முதல் மனைவியிடமும், நீயும் வேண்டும் என்று 2வது மனைவியிடம் கூறி இருவரையும் ஒரே வீட்டிற்கு ஷிப்ட் செய்து விட்டார்.




கணவரின் செயலால் கடுப்பாகிப் போன முதல் மனைவி இது சரிப்பட்டு வராது என்றார். 2வது மனைவிக்கும் ஒரே வீட்டில் எப்படி என்று சங்கோஜமாகியுள்ளது. ரெண்டு பேருமே "அவர் எனக்கே சொந்தம்"னு பிடிவாதம் பிடிக்க, விஷயம் போலீஸ் வரைக்கும் போயிருக்கு. காவல் நிலையத்தில் போய் உட்கார்ந்து பேசிப் பார்த்தும் கூட தீர்வு கிடைக்கவில்லை. போலீஸாருக்கே குழப்பமாகி யாராவது ஒருவருடன் வாழ வேண்டியதுதானேப்பா என்று அந்த கணவரிடம் கூற, அதெல்லாம் முடியாது சார்.. இரண்டு பேருமே என் கண்கள், இதயம், இரண்டு பேருமே வேணும் என்று காதல் வசனம் பேசி உருக ஆரம்பித்துள்ளார். அதைப் பார்த்து பயந்து போன போலீஸார், நீங்க முதல்ல வெளியே போங்க, நீங்களே பேசி முடிவு பண்ணிக்கங்க என்று அனுப்பி வைத்து விட்டனர்.


இதனால் வேறு வழியில்லாமல் ஊர்ப் பஞ்சாயத்தை அணுகினர் இரு மனைவியரும். ஆலமரத்தடியில் பஞ்சாயத்து கூடியது.  பஞ்சாயத்து "பெருசுகள்" இது மாதிரி பல பஞ்சாயத்துகளை பார்த்த அனுபவஸ்தர்கள் போல.. சட்டுப்புட்டென்று ஒரு தீர்ப்பைக் கொடுத்து கணவன் பிளஸ் மனைவியரை ஹேப்பி ஆக்கி அனுப்பி வைத்து விட்டனர்.


பஞ்சாயத்தின் "மாஸ்டர் பிளான்" இதுதான்!


ஊர் பஞ்சாயத்து கூடி ஒரு 'டைம் டேபிள்' போட்டு கொடுத்திருக்காங்க. அதைப் பார்த்தா ஐடி கம்பெனி ஷிப்ட் கூட தோத்துப் போயிரும். அப்படி ஒரு டைம் டேபிள்!


திங்கள், செவ்வாய், புதன்: முதல் மனைவிக்கு, வியாழன், வெள்ளி, சனி: இரண்டாவது மனைவிக்கு


சரி, அந்த ஞாயிற்றுக்கிழமை யாருக்கு? 


இங்கதான் பஞ்சாயத்து தலைவர்கள் ரொம்ப யோசிச்சு மூளையைக் கசக்கி ஒரு முடிவெடுத்திருக்காங்க. கணவனுக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும்ல? அதனால, ஞாயிற்றுக்கிழமை கணவருக்கு "வீக் ஆஃப்". அன்னிக்கி அவர் யாரோடயும் இருக்கக்கூடாது, தனியா எங்கயாவது போய் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். ஒரு வேளை தேவைப்பட்டால், அது யார் என்பதை அவரே தீர்மானிச்சுக்கலாமாம்!


என்னங்கடா பித்தலாட்டமா இருக்கு.. அப்படின்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது.. என்ன பண்றது.. பஞ்சாயத்து தீர்ப்பு இப்படி வந்திருக்கே!


வீக் ஆப் மட்டும்தான் உண்டா, மெடிக்கல் லீவு, தீபாவளி போனஸ், சிஎல், இஎல் இப்படி வேற ஏதாச்சும் சலுகைகளும் இருக்கான்னு தெரியலை... !


கடைசில கல்யாணத்தை கம்பெனி லெவலுக்கு கொண்டு போய்ட்டாங்ளே.. மொத்தத்துல, இந்த "பங்கு பிரிப்பு" தீர்ப்பு இப்போ சமூக வலைதளங்கள்ல செம வைரல் ஆகிட்டு வருது. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற முரட்டு சிங்கிள்ஸ் எல்லாம், "நமக்கு ஒருத்தி கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு, இவருக்கு வாரத்துல 6 நாள் புக்கிங்ல இருக்காரே"ன்னு பெருமூச்சு விட்டுட்டு இருக்காங்க!


சரி, ஒரு வேளை ஒரு பெண், இரண்டு கணவர்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்த முடிவெடுத்தால், அப்போதும் இதேபோல பெருந்தன்மையாக அந்த பஞ்சாயத்தார் தீர்ப்பு கொடுத்திருப்பார்களா.. பில்லியன் டாலர் கேள்வி!