உத்தரகண்ட் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி.. 10 பேர் மாயம்!

Su.tha Arivalagan
Jun 26, 2025,10:43 AM IST

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 18 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். 


காவல்துறை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட தகவலின்படி, பேருந்து மேட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். 




காயமடைந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.


காவல்துறை, நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புப் படையின் உயர் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நிர்வாகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.