உழவே உயிர்!
Jan 15, 2026,03:11 PM IST
- கவிஞர் சு. நாகராஜன்
அம்மா பசிக்கிறது
இதுதான் உலகில்
உள்ள அனைத்து
மனிதர்களின்
முதல் குரல் -ஆம்
உணவில்லேல் நாம்
இவ்வுலகில் உயிர்
வாழ முடியாது
ஆதி மனிதன் தொடங்கி
இக்கால மனிதன் வரை
இன்றும் சுழன்று
கொண்டேவருகிறது
உழவே உயிர்
நிலம் பண்படுத்த வேண்டும்
விதை விதைக்க வேண்டும்
நீர் ஊற்ற வேண்டும்
சூரிய ஒளி மண்மேனியில்
உதிக்க வேண்டும்
தாயானவள் குழந்தையை
ஈனுவது போல்
நிலத்தில் இருந்து
விதை வெளிவரும்
நாள் தானே
உழவனின் கண்ணில்
ஆனந்த கண்ணீர் வழிகிறது
குழந்தை பிறந்தாயிற்று
விட்டுச் செல்லவில்லை
தாயானவள்
பசிக்கும்போது
உணவளித்து
நோய் தாக்கும் போது
மருந்து கொடுத்து
ஏதேனும்
அசம்பாவிதம் ஏற்பட்டால்
உடல் படபடுத்து
அப்பப்பா
என் குழந்தை
அல்லவோ
வேலி தாண்டி- என்
பயிரை இங்கு மேய்ந்தது
யாரடா
என் உயிர் தான்
இங்கே காற்றின்
மெல்லிய ஓசையில்
அசைந்தாடுகிறது
என்னை உருவாக்க
உழவனே நீ படும்
துயரை நான் அறிவேன்
குளிரூட்டு அறையில்
கால் மேல்
கால் போட்டுக்கொண்டு
உணவினை உண்டு விட்டு
மீதியை வெளியில்
கொட்டும் போது
என் வேதனையை
யார் அறிவாய்
தோழர்களே
நீ உழவில்லை
என்றால் -உனக்கு
உயிர் இல்லை
உன் கால்
நிலத்தில் மிதிபடவில்லை
என்றால் உன்னிடம்
எனக்கு பங்கு இல்லை
உன் வியர்வை
என் மீது படவில்லை
என்றால் என் விதைகள்
உள்ளே தூங்கிக்
கொண்டிருக்குமே தவிர
உயிர் பெறாது
எழுந்திரு
உழவுதான் உயிரென்று
இங்கே முழங்கிடு
சேற்றுக்குள்ளே கால்
மிதித்திடு
உன்னவன்
சோற்றுக்குள்ளே
கை வைத்திடுவான்
(கவிஞர் சு.நாகராஜன் , அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)