மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
- கவிஞர் க. முருகேஸ்வரி
ஒரு சராசரிப் பெண்ணாகத் தன் வாழ்வைத் தொடங்கி, இன்று பல பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த வெ.ஜெயமாலினி. தடையற்ற உழைப்பும், தளராத மன உறுதியும் ஒரு பெண்ணை எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு இவரது வாழ்க்கையே ஒரு சாட்சி.
மற்ற பெண்களைப் போலவே ஜெயமாலினியின் வாழ்க்கையும் ஆரம்பத்தில் படிப்பு, திருமணம், மூன்று குழந்தைகள் என ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழன்றது. தன் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரு மகனையும் சிறந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது ஒரே லட்சியமாக இருந்தது. "கல்வி ஒன்றே அழியாத செல்வம்" என்பதை ஆழமாக நம்பிய அவர், தன் குழந்தைகளுக்காக ஓடி ஓடி உழைத்தார்.
அவரது உழைப்பிற்கு இன்று பலன் கிடைத்துள்ளது. அவரது இரண்டு மகள்களும் மருத்துவர்களாகவும், மகன் கட்டிடக்கலை (Architecture) துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் வரை ஒரு தாயாக அவர்களுக்குப் பின்னால் இருந்து அனைத்துத் தேவைகளையும் செவ்வனே செய்து முடித்தார்.
பிள்ளைகள் தங்களின் பாதையில் பயணிக்கத் தொடங்கிய பிறகு, தன்னைத் திரும்பிப் பார்த்த ஜெயமாலினிக்கு ஒரு சவால் காத்திருந்தது. 'தைராய்டு' பாதிப்பு மற்றும் உடல்நலக் குறைவு அவர் வாழ்வில் ஒரு தடையை ஏற்படுத்தியது. ஆனால், அந்தத் தனிமையும் சிகிச்சைக் காலமும்தான் அவரைச் சிந்திக்க வைத்தன.
"தன்னிடம் இருந்த திறமை எங்கே போனது? தன்னை நிரூபிக்க ஏன் தவறிவிட்டோம்?" என்ற கேள்விகள் அவர் மனதிற்குள் எழுந்தன. இந்தத் தேடலின் விளைவாக, சிறுவயதில் தனக்குப் பிடித்தமான யோகா மற்றும் தியானத்தை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கினார்.
யோகாவை முறைப்படி கற்கத் தொடங்கிய அவர், அதில் பல பட்டங்களைப் (DYHE - Diploma in Yoga for Human Excellence, B.S.S - Dip. in Yoga & Nature Cure) பெற்றுத் தேர்ச்சி பெற்றார். இன்று பூவிருந்தவல்லி பகுதியில் பல பெண்களுக்கு யோகா பயிற்றுவித்து வருகிறார். இவரது பயிற்சிப் பட்டறையில் யோகாவோடு சேர்த்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியமான தன்னம்பிக்கையையும் அவர் கற்றுக் கொடுக்கிறார்.
"நாம் சுவாசிக்கும் முதல் சுவாசமே அனைத்துக்கும் ஆதாரம்" என்று மாலினி உறுதியாக நம்புகிறார். குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்திற்குப் பிறகு பிராணயாமத்தின் அவசியம் குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் நமக்குள் இயங்கும் மூச்சுக்காற்றை நாம் கவனிக்கத் தொடங்கினால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும் என்பது இவரது அனுபவப் பூர்வமான உண்மை.
குழந்தைப் பருவத்திலிருந்தே யோகக் கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். குறிப்பாக, குழந்தைகளுக்குப் பிராணயாமப் பயிற்சி அளிப்பது, அவர்களுக்குச் சீரிய காயகல்பப் பயிற்சியைக் கற்றுத் தருவது.
தற்போது ஜெயமாலினியின் யோகா வகுப்பிற்கு வரும் பெண்கள், தங்களோடு மட்டுமல்லாமல் தங்களின் குழந்தைகள் மற்றும் கணவர்களையும் ஆர்வத்துடன் அழைத்து வருகின்றனர். "தன்னைத் தானாக உணர வைத்ததே யோகா தான்" என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.
உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் ஒரே அருமருந்து யோகா மட்டுமே என்பதைத் தன் வாழ்வின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெயமாலினி. யோகா அவருக்குச் செய்த அந்த மாயாஜாலத்தை, இன்று அவர் பல பெண்களுக்குக் கடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு 'தி கிரேட்' மாலினி ஒரு மிகச்சிறந்த உதாரணம்!