பெண் என்பவர் யார்?

Su.tha Arivalagan
Oct 19, 2026,12:40 PM IST

- வே. ஜெயந்தி


அன்று முதல் இன்று வரை,

அம்மா முதல் குழந்தை வரை,


பெண் என்பவள் யார்?

தனியாகச் செல்லவும் அஞ்சும் நிலை ஏன்?


ஏன் இந்த அவலம்?

இதைக் கேட்க ஆட்கள் இல்லையா?




பெண்ணின் கண்ணீரைத் துடைக்க

இந்த உலகில் யாரும் இல்லையா?


மகாத்மா காந்தி கண்ட கனவு

என்றுதான் நனவாகும்?

பெண்கள் அச்சமின்றி வாழும் காலம்

என்றுதான் மலர்ந்திடும்?


பூமியைப் பூமாதேவியாக வணங்குகிறோம்,

பெண்ணையும் தெய்வமாகப் போற்றுகிறோம்.


அதனால்தானோ என்னவோ,

அனைத்துத் துன்பங்களையும்

அமைதியாகத் தாங்கிக்கொள்கிறாள் பெண்!


ஆனால்,

தாங்குவதுதான் பெண்ணின் குணமா?

தலைநிமிர்ந்து வாழ்வது அவளின் உரிமையல்லவா?


பெண் என்பவள் வெறும் பொறுமையின் சின்னமல்ல;

அவள் ஓர் உயிர், ஓர் உணர்வு, ஓர் உலகம்!


அச்சமின்றி வாழ்வதும்,

சுதந்திரமாகச் செல்வதும்,

மரியாதையுடன் வாழ்வதும்

அவளுடைய பிறப்புரிமை!


(V. JAYANTHI , Graduate teacher, Creative  Writer, Chengalpattu district)