மண்ணின் மகத்துவம்.. பெண்ணே நீ தனித்துவம்!
Mar 08, 2026,01:08 PM IST
- மதுரை வி. ராஜேஸ்வரி
மண்ணின் மகத்துவம்!
பெண்ணே நீ
தனித்துவம்!
பேசும் சரித்திரம்
பெண்மையின் இலக்கணம்!
இன்பத்தைக் கருவாக்கி,
உலகில் மனிதரை
உருவாக்கி,
அடுப்பங்கரைத் தீயினை
அறிவாய் மாற்றி,
அண்டவெளி வரை
சிறகினை விரித்து
வீட்டின் விளக்காக
மட்டுமல்ல
நாட்டின் விண்மீனாகவும்
மின்னும் பெண்ணே!
மரணப் போராட்டத்தில்
மாசற்ற ஜீவனதை
மண்ணிற்கு அளித்திட்ட மகிழ்ச்சியில்
அழுகின்ற
முகம் பார்த்து
முதன்முறையாக
சிரித்தாய்!
பொறுமையில் பூமியாக,
அன்பில் ஆறாக,
அறிவில் சுடராக,
துணிவில் வாளாக,
கருணையில் மழையாக,
உறுதியில் மலையாக,
தன்மானத்தில்
சிங்கமாக,
தன்னம்பிக்கையில்
சிகரமாக,
தியாகத்தில்
மெழுகாக,
வெற்றியில்
மகுடமாக,
வழிகாட்டுதலில்
விண்மீனாக,
உழைப்பில்
தேனியாக,
உயிரைக் கொடுத்து
உயிரை உருவாக்கும்
உன்னதப் படைப்பு நீ!
இயற்கையின் உயரிய சிந்தனையில் உதித்த
உயிருள்ள
ஓவியம் நீ!
சாதனைகளோடு
சரித்திரம் படைக்க
கடவுளால் படைக்கப்பட்ட
கற்பக விருட்சம் நீ!
வஞ்சியரின் வதனமொன்றே
கவி இயற்ற உந்தும்!
பாவையரின் பார்வை மட்டுமே
காவியம் எழுதத் தூண்டும்!
மானிடத்தில் மாண்பான
பிறப்பிடம் பெண்!
பூக்களின் திருநாமத்தைப்
பெண்களுக்கு உரித்தாக்கி
உரைக்காமல்
உரைத்தனர்
மலர்போல்
மென்மையானவள்
பெண் என்று!
இடர் போன்ற கற்குவியல்
கண்முன் நின்றாலும்
தடைகளைத் தகர்த்தெறிந்து
தன் இலக்கினை
அடையப் போராடும்
குணம் கொண்டதால்
புனித நதிகள் பல
பெண்ணின்
பெயர் தாங்கியே
செல்கின்றன!
பெண் என்பவள்
நேற்று
அடுக்களையில்
கரண்டியுடன்
அன்பானவள்!
இன்று
அலுவலகத்தில்
கணினியுடன்
அறிவானவள்!
நாளை
அன்போடும்
அறிவோடும்
பிரபஞ்சம் ஆளும்
பெரும் சக்தி ஆவாள்!
ஆசைகள் கனவுகளாக
நிஜங்கள்
நிழலாக
வறுமையின் பாரமாக
எல்லாவற்றையும்
தாங்கி நிற்கும்
ஆணிவேராக
நிமிர்ந்து நின்று,
அன்னையாக
அரவணைத்து,
மனைவியாக
உடன் பயணித்து,
சகோதரியாக
அன்பு செய்து,
மகளாக
மடி தவழ்ந்து,
தோழியாக
தோள் கொடுத்து,
அன்பைக் கூட எதிர்பார்க்காமல்
எல்லாப் பரிமாணங்களிலும்
வாழும் பெண்களுக்கு
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்!
கவிதை: வி. ராஜேஸ்வரி, உதவியாளர், மதுரா கல்லுரி, மதுரை.