தடங்கல்கள் எனக்குப் புதிதல்ல... சவால்களை முறியடித்து பொங்கல் ரேஸில் குதிக்கும் வா வாத்தியார்!

Meenakshi
Jan 13, 2026,04:39 PM IST

சென்னை: தடங்கல்கள் எனக்கு புதிதல்ல. ஒரு நல்ல கதை தனக்கு தேவையானவற்றை தானே அமைத்துக்கொள்ளும் என்பார்கள். நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை குறித்து கவலைப்படக்கூடாது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.


2026 பொங்கல் திரைப்போர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வரிசையாக மோதவிருக்கும் சூழலில், நடிகர் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.




கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பே முடிந்த படம் வா வாத்தியார். இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார். நலன் குமாரசாமி இதுவரை சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். இரண்டுமே மெகா ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் தான்.


இந்நிலையில், இயக்குநர் நலன் குமாரசாமி மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் பல காரணங்களால் ரிலீஸ் தேதியில் மாற்றங்களைக் கண்டது. இது குறித்துப் பேசிய நடிகர் கார்த்தி, சவால்களைக் கண்டு தான் அஞ்சுவதில்லை. சினிமாவாகட்டும் அல்லது வாழ்க்கையாகட்டும், தடங்கல்கள் எனக்குப் புதிதல்ல. ஒரு நல்ல படைப்பு மக்களைச் சென்றடைவதில் சில சிரமங்கள் இருப்பது இயல்புதான். அந்தச் சவால்களைத் தாண்டி வரும்போதுதான் வெற்றி இன்னும் வலிமையாக இருக்கும். 'வா வாத்தியார்' நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பொங்கல் விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.