சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாழ்வியல் இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற வரும் நிலையில், இந்த ஆண்டும் வருகின்ற சனிக்கிழமை வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பு சார்பாக, வாழ்வியல் இலக்கிய சங்கமம் 2025 நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை இணைப் பேராசிரியை முனைவர் மு.ஜோதிலட்சுமி பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.
சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அந்நாட்டு அரசாங்கம் ஆதரவு அளிக்கிறது. அங்கு தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தமிழர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்கப்பூரில் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பு, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் இலக்கியச் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கடந்த ஏழு ஆண்டாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் இலக்கிய சங்கமம் 2025 என்ற நிகழ்ச்சியை கொண்டாட இலக்கிய பொழில் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழ் மொழி 2025 வாழ்வியல் இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (12.4.2025) மதியம் 3 மணிக்கு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறுகிறது. தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக முத்தொள்ளாயிரம் காட்டும் மூவேந்தர்கள், இசை பரதநாட்டியம், இலக்கியப் போட்டிகள் போன்றவை நடைபெற உள்ளன.
அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரைப் பற்றி கூறும் பாடல்கள் அடங்கிய நூல் முத்தொள்ளாயிரம் ஆகும். இந்த நூலில் மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்விய இலக்கிய பொழியில் இலக்கியச் சங்கமம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் உலகத் தமிழ் மாமணி இரா. தினகரன் கலந்துகொண்டு ஏன் தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். அதேபோல் எண்ணும், எழுத்தும் தலைப்பில் வாழ்வியல் இலக்கியப் பொழில் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.
இவர்களுடன் இலக்கியத்தில் சமூக கட்டமைப்பும் புலவர்கள் நோக்கும் என்ற தலைப்பில் முனைவர். மணிவண்ணன் முருகேசன், நின்ற சொல்லர் நீடு வாழ்வர் என்ற தலைப்பில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை இணைப் பேராசிரியை முனைவர் மு.ஜோதிலட்சுமி பேசவுள்ளனர். ராஜேஸ்வரி ரமேஷ் நெறியாளுகை செய்கிறார்.
இந்நிகழ்ச்சி முடிவில் இலக்கியப் போட்டிகளில் சிறப்பாக பங்களிப்பாற்றியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.