வடசென்னிமலை ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா
சேலம்: சேலம் மாவட்டம், காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில், இந்த ஆண்டு பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
மார்ச் 24ம் தேதி பங்குனி அமாவாசையிலிருந்து 7-வது நாளில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
ஏப்ரல் 1ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நடைபெற உள்ளது . அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 3ம் தேதி மூன்றாம் நாள் சப்தாவரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
கொடியேற்றம் முதல் சப்தாவரணம் வரை 10 நாட்களும் தினசரி உற்சவங்கள் நடைபெறும். பக்தர்களை மகிழ்விக்கத் தாரை தப்பட்டை போன்ற நாட்டுப்புற கலைகள், சின்னத்திரை கலைஞர்களின் பன்முக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சர்க்கஸ் எனப் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பழனி முருகன் கோவிலைப் போன்றே அமைப்பைக் கொண்டுள்ளதால், வடசென்னிமலையை பக்தர்கள் "சின்னப் பழனி" எனப் பெருமையுடன் அழைக்கின்றனர்.
திருவிழாக் காலங்களில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்கும் கடைகள் அமைக்கப்படும். வீட்டு உபயோகப் பொருட்கள், இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் எனப் பக்தர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்லலாம்.
வடசென்னிமலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களும் இந்த 10 நாள் திருவிழாவில் திரளாகக் கலந்துகொண்டு, அருள்மிகு பாலமுருகனின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
(செய்தி: பத்மாவதி, காட்டுக்கோட்டை)