வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Swarnalakshmi
Dec 12, 2025,01:38 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கேரளாவில் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கோவில்களில் வைக்கம் மகாதேவர் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் வைக்கத் தஷ்டமி திருவிழா சிவபெருமானை சிவலிங்க வடிவில் வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மலையாள மாதமான விருச்சிக மாதத்தில் ( நவம்பர் -டிசம்பர்)  வைக்கத் தஷ்டமி திருவிழா  12 நாட்கள்  வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 7ஆம் தேதி ரிஷப வாகனம் மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதி ஆராட்டு நடைபெறுகிறது.


வைக்கம் கோவிலின்  சிறப்புகள் :


மலையாள நாட்காட்டியின் படி விருச்சிக மாதம், தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை சூரிய பகவான் வைக்கத் தப்பன் மீது நேரடியாக தனது ஒளிக் கதிர்களை பரவச் செய்து தானும் தரிசனம் செய்வதாக ஐதீகம். இந்த வைக்கம்  மகாதேவர் கோவிலில் வியாக்ரபாதர்க்கு தரிசனம் கொடுத்ததை நினைவுபடுத்தும் விதமாக ஆலமரத்தோடு கூடிய "வியாக்ர பாதர் மேடை" இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.




இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் ஐந்து அடி உயரம் கொண்டவர். இது  திரேதா யுகத்தில் உருவானதாக நம்பப்படுகிறது. இக்கோவில் 

மூலவர் "வைக்கத்தப்பன்" என்றும் "வியாக்ர புரீஸ்வரர்" என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் கோட்டயத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள சிவபெருமான் பகலில் மூன்று வடிவங்களில் தோன்றுகிறார். காலை நேரத்தில் சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவிலும், நண்பகல் நேரத்தில் அவர் கிரதா மூர்த்தியாகவும் மற்றும் மாலையில் அவர் பார்வதி தேவியுடன் சாம்பசிவன் வடிவிலும் அருள் பாலிக்கிறார். இந்தத் திருவிழா "வைகாதஷ்டமி " என்றும்   "வைக்காஷ்டமி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வு வைக்கம் மகாதேவர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதாகும். இந்த திருவிழா நாட்களில் கோயிலின் சிறப்பு சடங்குகள் மற்றும் விழாக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கின்றன. 


வைக்கத் தஷ்டமி திருவிழா : டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும்


இந்த திருவிழா நாட்களில் நடன நிகழ்ச்சிகள் வண்ணமயமான ஊர்வலங்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது உற்சவங்கள் மேளதாளங்களுடன் நடைபெறும் ஊர்வலங்களை காண கண் கோடி வேண்டும். பாரம்பரிய நடனம் மற்றும் இசை வடிவங்கள் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரம்மாண்டமாக   ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.


பக்தர்களும் சிவபெருமானுக்கு பழங்கள், பூக்கள் மற்றும் பிற பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். சிலர் பக்தியின் அடையாளமாக சிறப்பு தான, தர்மங்களையும் செய்வது வழக்கம். அஷ்டமி அன்று வைக்கத்தில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாள் ஈசன்,பார்வதி தேவியுடன் சேர்ந்து அமர்ந்து அன்னதானத்தில் பங்கு பெற்று அருள் புரிவார் என்றும் நமது அனைத்து பிரார்த்தனைகளையும் உடனே செவிமடுப்பார் என்றும் ஐதீகம் உள்ளது.


இக்கோவிலில் உச்சிக்கால பூஜைக்கு முன்பாக சென்ற பதிவில் கூறியவாறு மூன்று கோவில்களிலும் வரிசையாக தரிசனம் செய்து வருபவர்களுக்கு, அவர்களுடைய வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்று வழிவழியாக நம்பப்படுகிறது.


வைக்கத் தஷ்டமி பற்றிய புராண விளக்கங்கள் உப புராணங்களில் ஒன்றான பார்கவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் மலையாள மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இன்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில்(London British Library) பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்று கூறப்படுகிறது.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.