தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
சென்னை: திட்டமிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது.
மாநிலங்களின் பங்களிப்பை உரிய முறையில் 16-ஆவது நிதிக்குழு அங்கீகரிக்க முற்பட்ட போதும், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் தமிழ்நாட்டிற்கு மற்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களைக் காட்டிலும் நிதிப்பகிர்வு சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யப்பட்டு இருக்கும் பச்சை துரோகம் ஆகும்.
உத்திரபிரதேசத்திற்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 910 கோடி ரூபாய்,
பீகார் மாநிலத்திற்கு 1 லட்சத்து 51 ஆயிரத்து 831 கோடி ரூபாய்,
மத்திய பிரதேசத்திற்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 133 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு வெறும் 62 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மட்டுமே நிதி வழங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 4.097 விழுக்காடு என்ற மிகச்சொற்ப அளவிலேயே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருக்கும்.
இதனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்குச் சுமார் 5000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சீரமைப்பில் மாநிலங்களுக்கான நிதி வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான ஒன்றிய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டிக்கத்தக்கது ஆகும்.
மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்காததன் காரணமாக அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு ஜல் ஜீவன் திட்டத்தை நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படுத்திய போதிலும் மத்திய அரசு இன்னும் விடுவிக்காத நிதி 3,112 கோடி ரூபாய் நிதி குறித்தும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்திற்கு 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 67 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தையே முழுவதுமாக முடக்குவதற்கான முயற்சியாகும்.
கோவை, மதுரை மெட்ரோ இரயில், திட்டங்களை முற்றிலுமாக ஒன்றிய அரசு புறக்கணித்து இருக்கிறது. தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. வழக்கமாக நிதியமைச்சர் திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட் உரையை தொடங்குவார். ஆனால் இந்தமுறை அதையும் விட்டுவிட்டார்.
சட்டமன்றத் தேர்தலை தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள போதும் பாஜக அரசு, பெயரளவுக்கு கூட தமிழ்நாட்டிற்கு திட்டங்களை அறிவிக்க முன்வரவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாஜக அரசை கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். கழக மாவட்ட செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றி பெற செய்ய முன்வர வேண்டும்.
திட்டமிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மாணவர்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்று தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்