பலருக்கு வரலாறு மட்டுமே.. உங்களுக்கு வசீகரமும் இருக்கு.. சிலாகித்த வைரமுத்து..சொல்லிப் பார்த்த ரஜினி

Su.tha Arivalagan
Oct 12, 2026,11:32 AM IST

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை, கவிஞர் வைரமுத்து அவரது வீட்டிற்குப் போய் சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். அப்போது ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாறு புத்தகம் உருவாகி வருவதாக ரஜினி சொன்னதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த்தை அவ்வப்போது சந்தித்துப் பேசி விட்டு வருவது வைரமுத்துவின் வழக்கமாகும். அந்த வகையில் அவர் சமீபத்தில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:


ரஜினிகாந்த் அவர்களை

எப்போது சந்தித்தாலும்

இன்னிசை பாடும் இதயம்


எதிராளிக்கு

இன்பம் கடத்தும்

மின்சார மனிதர் அவர்


“பார்த்து நாளாயிற்று;

பார்க்க வந்தேன்;

ஜெயிலர் 2 வெற்றிபெற

வாழ்த்துகிறேன்” என்றேன்




கலை பேசினோம்;

வாழ்வியல் பேசினோம்;

ஒரு வார்த்தைகூட

அரசியல் பேசவில்லை


“எப்போது வெளிவரும்

சுயசரிதை” என்றேன்


“வேலை நடக்கிறது;

விரைவில் வெளிவரும்" என்றார்


“உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது" என்றேன்


"ஏன்?" என்றார்


"பலபேருக்கு 

வரலாறு இருக்கிறது;

உங்களுக்கு வசீகரமும்

இருக்கிறது” என்றேன்


நான் சொன்னதை

மீண்டும் மீண்டும்

சொல்லிப் பார்த்துக்கொண்டார்


"முதலில்

தமிழ் ஆங்கிலம்

இரண்டிலும் வெளிவரலாம்" என்றார்


"வந்தால்

அதிகம் விற்பனையாகும்

புத்தகங்களுள் ஒன்றாய்

விளங்கும்" என்றேன்


பசுந்தேநீர்

பருகக் கொடுத்தார்


அதிலிருந்த துளசிமணம் 

வீடு வரும்வரை

வீசியது நாசியில்