திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து மீது மர்ம நபர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையை முடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கியபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென தனது காலணியை அவர் நோக்கி வீசினார்.
அது வைரமுத்துவின் அருகில் விழுந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த நபரைப் பிடித்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.