திமுகவில் உறுதியாக தொடர்கிறேன்.. நான் ஏன் தவெகவுக்குத் திரும்ப வேண்டும்.. வைஷ்ணவி

Su.tha Arivalagan
Oct 09, 2025,06:22 PM IST

சென்னை: தவெகவில் இணைந்து பிரபலமாகி திமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் வைஷ்ணவி என்பவர் மீண்டும் தவெகவுக்குத் திரும்பப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார்.


வைஷ்ணவி என்பவர் சமூக வலைதளங்களில் பிரபலமாக வலம் வந்தவர். பின்னர் விஜய்யின் தவெகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். தவெகவில் இணைந்த பின்னர் அவர் மிகவும் பிரபலமானார். ஆனால் திடீரென தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.


திமுகவில் இணைந்த வைஷ்ணவி, விஜய்யின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்து டிவீட் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் தவெகவுக்கு வரப் போவதாக செய்திகள் வெளியாகின. இதை தற்போது அவர் வதந்தி என்று மறுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,  சமூக வலைதளங்களில், நான் மீண்டும் தவெக-வில் இணையப் போகிறேன் என்ற பொய்யான வதந்தி பரவி வருகின்றது. அந்தக் கட்சியின் அமைப்பு முறை மற்றும் அதன் தலைவரின் ஆளுமை திறனைப் பற்றி நான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தெளிவாக கூறியிருந்தேன்.




“மாற்றம்” என்ற பெயரில் தொடங்கிய அந்தக் கட்சி, வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே மக்களின் நம்பிக்கையைக் குலைத்து, கரூரில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில் நஞ்சில்லா மனம் கொண்ட பிஞ்சுகளின் உயிர்  சிதைந்ததை பார்த்தும், ஈரமில்லாமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன்.


இத்தகைய பாவச்சுமையுடன் பயணிக்கும் கட்சியிலிருந்து நான் விலகியிருப்பதில் நிம்மதி அடைகிறேன். என் அரசியல் பயணம் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே தொடரும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்