Tamil Short Poem: வலை!
- சசிகலா விஸ்வநாதன்
வலையில் தான் இருக்கிறேன்;
என்ன வகையான வலை...
அன்பின் வலையா?
ஆணவ வலையா?
தளர்வான முடிச்சுதான்;
வலிக்கவும் இல்லை.
நேரம் ஆக ஆக
உறுத்தும் உறுத்தல்
மனத்தைத் தான் உறுத்துகிறது; மிகவும்.
காலில் ஒரு கட்டு.
ஒரு காலில் மட்டும்.
நடக்க இயலும்,
தன் இச்சையில்
ஓட இயலாது.
இருந்த இடத்தில்
சுற்றி வரலாம்.
வெறுப்பாய் இருக்கிறது;
வெறுமே சுற்றி வர.
எந்த வலையானாலும்
அதுவே நெக்கு விட
காத்திருக்கிறேன்.
கத்தி கொண்டு வெட்டி விட்டு
வெளியேற மனமின்றி...
அன்பின் வலைதானோ?
அன்றி;
ஆணவ வலைதானோ?
ஆராய மனம் துணியாமல்
நான் என்றும் போல்
ஊமையாய், மௌனத்தில்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)