Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

Su.tha Arivalagan
Aug 20, 2026,09:51 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வருடம் வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21ஆம் தேதியா? அல்லது 28ஆம் தேதி யா ?  என்று ஒரு சிறு சந்தேகம் உள்ளது.


ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை தொடர்ந்து வரும், ஸ்ராவண மாதம்( ஆவணி மாத) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் ஸ்ராவண மாத (ஆவணி ) வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.


வரலட்சுமி பூஜைக்கான நேரம் :


காலை நேரம்:


காலை 6:00 மணி முதல் 7:20 மணி வரை.

மதிய நேரம்: மதியம் 12:15 மணி முதல் 0 2:15 மணி வரை.


மாலை நேரம் :


மாலை 06:15 மணி முதல் 07 :15 மணி வரை.


அவரவருக்கு இயன்ற நேரத்தில் பூஜை செய்வது சிறப்பு. அவரவர் குடும்ப வழக்கப்படி வரலட்சுமி பூஜை செய்வது அதீத சிறப்பு.




வரலட்சுமி விரத பூஜை முறைகள்:


அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமான புத்தாடை அணிவது சிறப்பு. ஆகஸ்ட் 20ஆம் தேதி வியாழக்கிழமை பூஜை அறையை சுத்தம் செய்து வைப்பது சிறப்பு. அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட்டு, வரலட்சுமி தேவியை வரவழைக்கும் விதமாக போடுவது, வீட்டு வாசலில்  அழகு சேர்க்கும். பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு மனை அமைக்க வேண்டும்.


மனையின்  மேல் வாழை இலையில் பச்சரிசி பரப்பி வைத்து,அதன் மீது செம்பு, பித்தளை, வெள்ளி அல்லது வெண்கல கலசத்தை வைக்க வேண்டும். 


குறிப்பு: தங்களுடைய குடும்ப வழக்கத்திற்கு ஏற்பவும்,அவரவர்  நிதி நிலைமைக்கு ஏற்பவும் செய்வது சிறப்பு.


கலசத்தில் நவதானியங்கள், பச்சரிசி,நாணயங்கள், மஞ்சள் மற்றும் மா இலைகளை வைத்து, அதன் மீது தேங்காய் வைத்து,மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பட்டாடையில் அலங்காரம் செய்து வைக்க வேண்டும்.


அம்மனின் திருமுக படிமத்தை வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இன்றைய காலங்களில் கடைகளில் ரெடிமேடாக  அம்மனின் திருமுக படிமங்கள் கிடைக்கிறது. சிலர் வீடுகளில் வெள்ளி அம்மன் முகம் வைத்து வழிபடுவது வழக்கம். வாசனை மலர்கள் மற்றும் தாமரை மலர் கொண்டு அலங்காரம் செய்வது சிறப்பு.


நோன்பு கயிறு:

 

ஒன்பது நூற்கள்க் கொண்ட மஞ்சள் கயிற்றில் (நோன்புச் சரடு ) ஒன்பது முடிச்சுகள் போட்டு அம்மன் முன்பாக வைத்து பூஜைக்கு வேண்டும்.


நைவேத்தியம் :


சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை,சுண்டல், பாயாசம், வடை எலுமிச்சம் சாதம் மற்றும் இனிப்பு பண்டங்களை அவரவர் வழக்கப்படி நைவேத்தியமாக படைக்க வேண்டும்.


முழு முதற்கடவுளான விநாயகர் ஆவாஹனம் செய்த பிறகு, கலசத்திற்கு பூஜை செய்ய வேண்டும். தீப ஆராதனை செய்து, கலசத்தில் வைத்த மஞ்சள் நோன்பு சரடை விரதம்  மேற்கொள்பவர்  கையில் கட்டி கொள்வார்கள்.பின்னர் படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம்,மஞ்சள், குங்குமம், புடவை, மஞ்சள் கயிறு போன்றவற்றை தங்கள் உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ள சுமங்கலி பெண்களுக்கும் கொடுத்து ஆசி பெற்று, காலை முதல் உண்ணா  நோன்பிருந்து பூஜை முடிந்த பின் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.


வரலட்சுமி விரதம் நாளன்று முழுவதும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,கனகதாரா ஸ்தோத்திரம்,லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி அஷ்டோத்ரம், லட்சுமி தேவியை குறித்த பாடல்கள் பாராயணம் செய்வது சிறப்பு.மாலை நேரத்தில் உற்றார் உறவினர் மற்றும் விரதம் மேற்கொள்ளும் அண்டை  வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பரிமாறிக் கொள்வார்கள்.


வரலட்சுமி நோன்பு:


வரலட்சுமி விரதம் பதினாறு வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்கள் நோன்பு இருக்கும் மாபெரும் பண்டிகையாகும். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் உடல் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலிபாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும்,வரலட்சுமி விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.


 "வரலட்சுமி வாராய் என் இல்லமே!"


வரலட்சுமி தேவியின் அருள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலங்களும் கிடைக்கப்பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.