கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்‌!

Manjula Devi
May 09, 2025,05:06 PM IST

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மத குருவாக (போப்) தேர்வு செய்யப்பட்டார் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட். இவர் போப் பதினான்காம் லியோ என்று அழைக்கப்படுவார் என்று வாடிகன் சிட்டி தெரிவித்துள்ளது. புதிய போப்பாண்டவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் போப்பாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.


கடந்த மாதம் 21ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து இவரது உடல் ரோம் நகரில் 26 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதே சமயத்தில் அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின.




கத்தோலிக்க  மரபுப்படி, அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான கூட்டம் மே 5 ஆம் தேதியிலிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று அறிக்கப்பட்டது.  அதன்படி, நேற்று, புதன்கிழமையன்று புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.  வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்துக்குள் ரகசியமாக நடைபெற்றது இந்த வாக்குப்பதிவு. இந்த வாக்கெடுப்பில் 71 நாடுகளைச் சோ்ந்த 80 வயதுக்குட்பட்ட 133 கார்டினல்கள் பங்கேற்றனர். இதில், புதிய போப்பாக  ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வானதை அடுத்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.


ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் அமெரிக்காவை சேர்ந்த முதல் போப் ஆண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தவர். பெருநாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை கவனித்து வந்தவர். இவர் போப் பதினான்காம் லியோ என்று அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.