புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு
புதுச்சேரி: விசிக சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் 3 வேட்பாளர்களுக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் 'வாளி' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த விசிக தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், இந்தச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் விசிகவிற்கு, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி 'வாளி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தீவிரம்: சின்னம் உறுதியானதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் 'வாளி' சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகளில் அக்கட்சியின் நிர்வாகிகள் இப்போதே களமிறங்கியுள்ளனர்.
கட்சியின் மேலிடம் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள், இந்தச் சின்னத்தின் மூலம் தங்கள் கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் வீடு வீடாகக் கொண்டு செல்வோம் எனத் தெரிவித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் சில இடங்களில் 'பானை' சின்னத்தில் போட்டியிட்டாலும், மாநிலங்களுக்கு மாநிலம் தேர்தல் ஆணையத்தின் சின்ன ஒதுக்கீடு மாறுபடும் என்பதால், புதுச்சேரியில் 'வாளி' சின்னம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.