போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

Su.tha Arivalagan
Sep 22, 2026,10:54 AM IST

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவர் பயன்படுத்திய காரின் பதிவு எண் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழும்பியுள்ளது.   


சம்பவம் என்ன?


காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 'TN 07 CM 2031' என்ற பதிவு எண் கொண்ட ஆடம்பர காரில் வருகை தந்தார். அவர் காரில் இருந்து இறங்கும் காட்சிகளும், அந்த காரின் பதிவு எண்ணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக இணையத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் சிலர் மத்திய அரசின் வாகனப் பதிவுத் தகவல்களை வழங்கும் 'பரிவாஹன்' (Parivahan) செயலி மூலம் 'TN 07 CM 2031' என்ற பதிவு எண்ணை ஆய்வு செய்து சோதித்தனர்.


ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்:




பரிவாஹன் தளத்தில் சோதனை செய்ததில், 'TN 07 CM 2031' என்ற இந்த பதிவு எண் ஒரு சொகுசு காரினுடையது அல்ல என்பதும், அது 'ஹோண்டா டியோ' (Honda Dio BS IV) இருசக்கர வாகனத்திற்கு (ஸ்கூட்டர்) வழங்கப்பட்ட பதிவு எண் என்பதும் தெரிய வந்தது. மேலும், அந்த இருசக்கர வாகனம் சென்னை திருவான்மியூர் (TN07) மோட்டார் வாகன ஆய்வாளர் (RTO) அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியானது.   இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை ஒரு காரில் போலி எண் பலகையாகப் (Fake Number Plate) பயன்படுத்தி திருமாவளவன் பயணித்தாரா என்ற கேள்வியுடன், பரிவாஹன் செயலியின் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.   


அரசியல் வட்டாரத்தில் காரசார விவாதம்:


சட்டத்தையும் மோட்டார் வாகன விதிகளையும் மதிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர், போலி எண் பலகை பொருத்தப்பட்ட வாகனத்தில் பயணித்தது சரியா என எதிர்கட்சியினரும், இணையவாசிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய் நடித்த கோட் படத்தில் அவர், 'CM 2026' என்ற பதிவெண் கொண்ட காரை பயன்படுத்துவது போல் காட்டப்பட்டிருக்கும். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் செம வைரலாகின. அதே போல் 2026ல்  விஜய், தமிழக முதல்வராகவும் ஆகி விட்டார். அதே போல் திருமாவளவனுக்கும் முதல்வர் ஆசை இருப்பதையே இது காட்டுகிறது என பலரும் கூறி வருகிறார். 


கட்சித் தரப்பு விளக்கம்: 


அதேவேளையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த காரில் தலைவர் பயணித்திருக்கக் கூடும் என்றும், காரின் பின்னணி மற்றும் பதிவு எண் குறித்த விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் விசிக ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.ஒரு சொகுசு காரில் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் பொருத்தப்பட்டிருந்தது போக்குவரத்து விதிகளின்படி சட்டவிரோதமானது என்பதால், காவல்துறையும் போக்குவரத்து துறையும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.