பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்!

Meenakshi
Apr 23, 2025,06:35 PM IST

சென்னை: ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உளவுத்துறை படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான  பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த  தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பயங்கவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.


இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத ஹபீஸ் சயீத்தின் லஷ்கர் இ தொய்பா வின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 




இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், காஷ்மீரில் நடந்த கொடூர சம்பவம்  பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. அங்கு பயங்கரவாதமே இல்லை. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பாஜக அரசின் கூற்றை நம்பிச் சுற்றுலா சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.