கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்
சென்னை: கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், 41 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிழந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், எம்பிக்கள் குழுவை நேற்று அமைந்தார். அந்த குழு தற்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
எனவே, ராகுல்காந்தி அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.