100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
கோவை: 100 நாள் வேலை திட்டத்தை முழுவதுமாக ஒழிக்க நினைக்கிறது பாஜக. அதற்காகவே இந்த பெயர் மாற்றம் செய்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தை முழுவதுமாக ஒழிக்க நினைக்கிறது பாஜக. அதற்காகவே இந்த பெயர் மாற்றம் செய்துள்ளது. காந்தியடிகளை சிறுமை படுத்திக்கொண்டே இருக்கிறது பாஜக. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என கொண்டாடுகிறார்கள்.
பாஜகவின் அரசியல் எந்தளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறது ன்பதற்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதே உதாரணம். 100 நாளை 125 நாட்களாக உயர்த்தியிக்கிறோம் என நாடகமாடுகிறார்கள். இந்த போக்கை கண்டிக்கிறோம். அத்துடன் திமுக தலைமையில் அனைத்து மதச்சார்ப்பாற்ற கட்சிகளும் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
திருப்பரங்குன்றம் விவாகாரத்தில் ஒரு நபர் உயிரிழந்துள்ளது வருந்தத்தக்கது. அவரின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். பாஜகவின் மதவெறி அரசியலுக்கு ஒருவர் பலியாகி இருப்பது வருந்தத்தக்கது. இன்னும் அவர்கள் என்னென்ன செய்யப் போகிறார்களோ என்ற கவலை தான் மிஞ்சுகிறது. திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற துடிக்கிறார்கள். இதை கண்டித்து வருகின்ற 22ம் தேதி விசிக சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தேர்தலுக்கு விசிகவில் மாவட்ட செயலாளர்கள் நியமனப் பணிகளை துவங்கும். எஸ்.ஐ .ஆர் மூலம் பலரை நீக்குவதே பாஜகவின் நோக்கம். தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்குரிமை என்ற பெயரில் மக்களின் குடியுரிமையை பறிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.