எனக்கு முதல்வர் பதவி தர முன்வந்தார்களா.. விசிக திருமாவளவன் அதிரடி விளக்கம்!

Su.tha Arivalagan
May 12, 2026,02:23 PM IST

டெல்லி : தவெக.,விற்கு ஆதரவு அளிக்கும் முடிவை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அவருக்கு முதல்வர் பதவி வழங்க பேரம் பேசப்பட்டதாக பரவிய தகவல்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.


டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விஜய்யின் கட்சிக்கு ஆதரவு அளித்ததற்கான முக்கிய காரணங்களை முன்வைத்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் அதற்கு இல்லை.இந்தச் சூழலில், மக்கள் அளித்த தீர்ப்பை மதிப்பதற்கும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் விசிக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். 


"மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒரு புதிய அரசு அமைவதற்கு விசிக தடையாக இருக்காது" என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.


தாமதத்திற்கான காரணங்கள்:




ஆதரவு அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அவர் அளித்த விளக்கத்தில்,  விசிக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. எனவே, இத்தகைய ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன் கூட்டணித் தலைவர்களுடனும், குறிப்பாக இடதுசாரி கட்சிகளுடனும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டியிருந்தது. தன்னிச்சையாக முடிவெடுக்காமல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் இது குறித்துப் பேசியதாகவும், தமிழகத்தில் ஒரு நிலையான அரசு அமையத் தான் தடையாக இருக்கப் போவதில்லை என்று ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறிய பிறகே விசிக தனது கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். 


தவெக-வின் கொள்கை விளக்கங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆரம்பத்தில் தெளிவற்ற சூழல் நிலவியதால், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விவாதித்து ஒருமித்த கருத்தை எட்ட கால அவகாசம் தேவைப்பட்டது.


"கூட்டணி மாறவில்லை; இது தற்காலிக ஆதரவே" :


விஜய்க்கு ஆதரவு அளித்தாலும், விசிக இன்னும் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக திருமாவளவன் தெளிவுபடுத்தினார். "நாங்கள் ஆட்சியில் பங்கு கோரவில்லை; இது வெறும் வெளியிலிருந்து தரப்படும் நிபந்தனையற்ற ஆதரவு மட்டுமே. எங்களின் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான பயணம் திமுக தலைமையிலான கூட்டணியுடன்தான் தொடரும்" என்று அவர் கூறினார். 


திமுக கூட்டணியில் போட்டியிட்டு தான் நாங்கள் 2 இடங்களை வென்றோம். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றால் திமுக கூட்டணியில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாகி விடும். அதனால் தவெக.,விற்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இதில் எந்த பேரமும் பேசப்படவில்லை என்றார்.


முதல்வர் பதவியா?


அதிமுக-திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் திருமாவளவனுக்கு முதல்வர் பதவி அளிப்பதாக கூறப்பட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தை நடந்ததால் தான் விசிக, தவெக.,விற்கு ஆதரவு அளிக்க தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படும் தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "இத முற்றிலும் பொய்யானது. எனக்கு முதல்வர் பதவி வேண்டும் என நான் கேட்கவும் இல்லை. அவர்கள் அப்படி என்னிடம் பேரம் பேசவும் இல்லை. தவெக.,விற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதா, நிப்நதனையுடன் ஆதரவு தருவதா என்பதை பேசி முடிவு செய்வதற்கு தான் தாமதம் ஏற்பட்டதே தவிர, நீங்கள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.