10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

Su.tha Arivalagan
Mar 21, 2026,02:59 PM IST

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக அசியல் நகர்வுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பேஸ்புகு் லைவில் தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், தங்கள் கட்சிக்கு 10க்கும் குறைவான சீட்டுகளே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதை சூசகமாக சொல்லி வேதனை தெரிவித்துள்ளார்.


திருமாவளவன் வேதனை :


திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக தலைமையுடன் கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இன்று கட்சி தொண்டர்களிடம் வீடியோ வழியாக திருமாவளவன் பேசி உள்ளார். அதில் அவர், " விருப்ப மனு அளிக்க விரும்புபவர்கள் அதற்கான தொகையை டிடி.,யாக முடிந்தால் எடுத்து வரலாம். முடியவில்லை என்றால் பணமாக கொண்டு வந்து செலுத்தலாம். இது உங்களுக்கான உறுதி தொகை மட்டுமே.


தோல்விக்கு என்ன காரணம்? 




மக்கள் நலக் கூட்டணியில் இருந்த போது நமக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுனால் என்னால் சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது. 10 தொகுதிகளுக்கும் குறைவான சொற்ப இடங்களில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அழுத்தமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை 6 தொகுதிகள் மட்டுமே நமக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 2 தொகுதிகளில் தோல்வியை பெற்றோம். அரக்கோணம் தொகுதியில் தோல்வி அடைய என்ன காரணம் என கேட்ட போது, நீங்கள் வெளி ஆட்களை போட்டியிட வைத்ததால் தான் இந்த நிலை. அதே தொகுதியை சேர்ந்தவரை போட்டியிட வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என திமுக தரப்பில் சொல்லப்பட்டது. இந்த முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது அந்த தொகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளதால், வேட்பாளர் தேர்வில் நெருக்கடியான ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


புதிய கூட்டணிகளுக்கு வாழ்த்து:


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோரின் புதிய கூட்டணி முயற்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "புதிய கூட்டணிகள் அமைப்பதை நாம் வரவேற்கிறோம், அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை எத்தனை புதிய கூட்டணிகள் உருவானாலும், திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. மக்கள் செல்வாக்கு மற்றும் கொள்கை அடிப்படையில் இந்த கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை" என்று உறுதியாகத் தெரிவித்தார்.


அதிமுகவின் நிலை குறித்து கவலை:


அதிமுகவின் தற்போதைய அரசியல் போக்கு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட திருமாவளவன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பாஜகவிடம் சரணடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசுகையில், "ஒரு காலத்தில் கூட்டணிக்காக மற்ற கட்சிகள் போயஸ் தோட்டத்தைத் தேடி வந்த நிலை இருந்தது. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. கூட்டணி வாய்ப்புக்காக டெல்லியைத் தேடிச் செல்லும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பாஜக ஒரு 'கிள்ளுக்கீரையாக' பயன்படுத்துவது மிகுந்த கவலைக்குரியது. ஒரு பெரிய திராவிட இயக்கத்தின் இந்த வீழ்ச்சி வேதனையளிக்கிறது" என்றார்.


தொண்டர்களுக்கு விடுத்த அழைப்பு:


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கு உரையாற்றிய அவர், தேர்தல் நெருங்கும் வேளையில் தளம் மாறாமல், மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "சனாதன சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் கட்சிகளையும் அடையாளம் கண்டு முறியடிக்க வேண்டியது நமது கடமை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, சமூக நீதியைக் காப்பதில் உறுதியாக உள்ளது. தேவையற்ற வதந்திகளை நம்பாமல், தேர்தல் களத்தில் வெற்றியை உறுதி செய்ய இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.


விசிக.,விற்கு எத்தனை சீட் ?


கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, இந்த முறை திமுக தலைமையிடம் 10 தொகுதிகள் தர வேண்டும் என கேட்டு வந்தது. ஆனால் கடந்த முறை அளித்த அதே 6 தொகுதிகள் அல்லது அதிகம் என்றால் 8 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்றும், 10 தொகுதிகள் தருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் திட்டவட்டமாக சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விசிக.,விற்கு இந்த முறை 6-8 சீட்கள் மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திமுக தலைமையின் இந்த முடிவால் திருமாவளவன் அதிருப்தியில் இருப்பதையே இன்று அவரின் பேஸ்புக் லைவ் பேச்சு காட்டுகிறது.