ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

Su.tha Arivalagan
Feb 07, 2026,10:59 AM IST

சென்னை : ராமதாஸ் தலைமையிலான பாமக வந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாக இன்று தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார்.


பாமக இரண்டாக பிளவு பட்டிருக்கும் நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக, என்டிஏ கூட்டணியில் சென்று இணைந்து கொண்டது. என்டிஏ கூட்டணியில் இணையலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அன்புமணி சென்று சேர்ந்ததால், மகன் மீதுள்ள கோபத்தில் என்டிஏ கூட்டணியில் இணையும் முடிவை கை விட்டார் ராமதாஸ். இதனால் திமுக கூட்டணியில் இணையலாமா என நினைத்த போது, அங்கு திருமாவளவன் இருக்கிறாரே என ஆரம்பத்தில் சற்று யோசித்தார்.




பிறகு திருமாவளவனுடன் ஒத்துப் போகும் மனநிலைக்கு வந்த ராமதாஸ், திருமாவளவனை தான் பெறாத மகன் என தெரிவித்தார். ராமதாசை கூட்டணியில் சேர்க்க திமுக தலைமையும் தயாராக தான் இருந்தது. ஆனால் திருமாவளவன் சம்மதம் தெரிவித்தால், ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணையலாம் என கூறி விட்டார்கள். ஆனால் ராமதாஸ் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி திருமாவளவன், நானும் ராமதாசும் தமிழ் அமைப்பை நடத்தினோம். பிறகு அரசியல் ரீதியான காரணங்களுக்காக இருவரும் பிரிந்த போது வலிமை மிக்க ராமதாஸ் பின்னால் தான் அனைவரும் சென்றார்கள். இந்த சமூகம் அவ்வளவு எளிதில் என்னை ஏற்கவில்லை. மிகவும் போராடிய பிறகு தான் என்னை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள் என கூறி இருந்தார்.


திருமாவளவனின் இந்த வார்த்தைகள், ராமதாசை அவர் ஏற்க தயாராக இல்லை என்பதை சூசகமாக சொல்வது போல் இருந்தது. இந்நிலையில் இன்று தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த திருவாவளவன், ராமதாஸ் தலைமையிலான பாமக வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். எப்போதோ வரும் தேர்தலுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. எந்த காலத்திலும் பாஜக மற்றும் பாமக.,வுடன் எங்களால் கூட்டணி வைக்க முடியாது. அதற்காக திமுக தலைமைக்கு நாங்கள் எந்த அழுத்தமும் தரப் போவது கிடையாது. ஒருவேளை திமுக எடுக்கும் முடிவு எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்.


ராமதாசிற்காக திருவாளவனால் கிடைக்கும் தலித் ஓட்டுக்களை நிச்சயம் திமுக இழக்க தயாராக இருக்காது. இதனால் திமுக கூட்டணியில் இணையலாம் என காத்திருந்த ராமதாசிற்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. திமுக கூட்டணியில் தாங்கள் இணைவதற்கு திருமாவளவன் எப்படியும் சம்மதம் தெரிவித்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று, சமீபத்தில் நேர்காணலும் நடத்தினார் டாக்டர்.ராமதாஸ். ஏற்கனவே பாமக கட்சியோ, மாம்பழ சின்னமோ அவரிடம் இல்லாமல் இருந்தது. இப்போது திமுக கூட்டணியும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் தொண்டர்கள் மிகவும் குழப்பமான நிலையில் இருந்து வருகிறார்கள்.


தற்போது ராமதாஸ் முன்பு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ஒன்று, மகன் மீதான கோபத்தை ஓரம்கட்டி விட்டு, என்டிஏ கூட்டணியில் சென்று இணைந்து, தேர்தலை எதிர்கொள்வது. இரண்டாவது, தனிச்சின்னத்தில் தனித்து போட்டியிடுவது. மூன்றாவது, தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருப்பது. டாக்டர்.ராமதாஸ் மூத்த அரசியல் தலைவர். அனுபவம் வாய்ந்த அவர் இவற்றில் கடைசி இரண்டு வாய்ப்புக்களை கண்டிப்பாக தேர்வு செய்ய மாட்டார். என்டிஏ உடன் மீண்டும் கூட்டணி பேச்சை துவக்கும் முயற்சிகளை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.