விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
கடலூர்: வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு விழும் 100 வாக்குகளில் 25 விசிக வாக்குகளாக இருக்கும். கொத்துக் கொத்தாக சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு விசிக வாக்குகள் வந்து சேரும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கத் திறப்பு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை வெகுவாக புகழ்ந்து பேசினார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேச்சிலிருந்து:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என்னை ஒரு நண்பனாக, தோழனாக, சகோதரனாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்கி, அனைத்திலும் வெற்றி பெறவும் உறுதுணையாக இருந்தார். அதேபோல, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு விழும் ஒவ்வொரு 100 ஓட்டுகளிலும் 25 ஓட்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரியதாக இருக்கும்.
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வந்து சேரும். அந்த அளவுக்கு எங்களது களப் பணிகள் அமையும்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கேற்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கலைஞரை விட சிறப்பாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படிச் சொல்வதால், கலைஞரை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் ஆகாது. கலைஞர் வளர்த்து சிறப்பாக செயல்படுத்திய இயக்கத்தை, ஆட்சியை, அவரது மகன் அதை விட சிறப்பாக கவனித்து வருகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி தமிழ்நாட்டுக்கு தொண்டாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்ற துணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். ஓரணியில் தமிழகம் என்ற முன்னெடுப்பை திமுக எடுத்துள்ளது. உண்மைதான், திமுக அணியில்தான் தமிழகம் இருக்கிறது என்று கூறினார் திருமாவளவன்.
சமீப காலமாக விடுதலைச் சிறுத்தைகள் குறித்து சலசலப்பு நிலவி வந்தது. விஜய் கட்சியுடன் இணையப் போகிறார், அதிமுகவுடன் கை கோர்க்கப் போகிறார் என்று திருமாவளவன் குறித்து பேச்சுக்கள் எழுந்தன. அதையெல்லாம் தொடர்ந்து மறுத்து வந்தார் திருமாவளவன். இந்த நிலையில் சிந்தாமல் சிதறாமல் கொத்துக் கொத்தாக விசிக வாக்குகள் திமுகவுக்கே விழும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே திருமாவளவன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.