வேலவனுக்கு வேல் வந்த கதை
- பாவை.பு
உலகளவில் தமிழர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பெரு விழா என்றால் அது தைப்பூசம் தான்.
தை மாதம் தமிழ் நாட்காட்டியில் பத்தாவது மாதமாகும். ஜோதிடத்தில் மகர ராசியில் சூரியன் நுழையும் மாதம். ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகிறதே அது அந்த மாதத்திற்கு உரிய நட்சத்திரம் ஆகும். அந்த வகையில் தை மாதம் பெளர்ணமி அன்று பூசம் நட்சத்திரம் வருவதால் தைபூசம் சிறப்புற்றது.
போர்,வீரம் மற்றும் வெற்றியின் அடையாளமாக முருகனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நாள்.
அசுரர்களான சூரபத்மன்,தாரகாசுரனும் இணைந்து தேவர்கள் முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். இந்த போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டு சரணடைந்தனர்.
சூரபத்மன் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் தங்களுக்கு பிறக்கும் மகனால் தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் வாங்கிய காரணத்தாலும், இதேபோல் தாரகாசுரனும் பிரம்மனிடம் சிவனின் மகனால் தான் எனக்கும் மரணம் வேண்டும் என்றும் வரம் பெற்றதால், சிவபெருமான் தனது தெய்வீக சக்தியை, சக்தி தேவிக்கு வழங்கினார். அந்த சக்தியே ஆறு தீப்பொறி யாக வெளிப்படு அது குழந்தை யாக மாறி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு ஆறுமுகனாக உருவெடுத்தார் முருகப்பெருமான்.
சூரபத்மனை அழிக்க பார்வதி தேவி தனது சக்தியை வேலாக்கி, வேலவனிடம் வேலினை கொடுத்தது ஒரு தைப்பூச நாளில் தான்.
தாரகாசுரனை வதம் செய்தது தைப்பூசம் நாளில், சூரபத்மனை வதம் செய்தது ஐப்பசி மாதம் சூரசம்ஹாரம் அன்று.
வேல் என்பது ஆயுதம் அல்ல அது ஞானத்தின் வடிவம். அது அகந்தை ஆணவம் மற்றும் செருக்கை அழிக்கும் தெய்வீக சக்தி.
அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூசம் கொண்டாடப்படும் என்றாலும் அறுபடை தலங்கலான திருப்பரங்குன்றம் திருத்தணி, பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர், மற்றும் பழமுதிர்சோலை யில் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அதிலும் பழனியில் நடைப்பெறும் தை பூசமே உலக பிரசித்திப்பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனே காவடி எடுக்கும் வழிப்பாட்டினை முதன் முதலில் தைபூசத்தில் தொடங்கி வைத்தார் என்றும், அதனால் இடும்பன் முருகனின் அருளால் பழனியில் ஆட்கொள்ளப்பட்டதாகவும் இதன் காரணமாகவே தைப்பூசத்தன்று பழனியில் காவடி விழா 10 நாட்கள் மிகச்சிறப்பான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் தை மாதம் பெளர்ணமி கூடிய பூச நட்சத்திரத்தன்று தான் சிவபெருமான் தனது ஆனந்த கூத்தை நடராஜர் திருக்கோலத்தில் உலகிற்கு காட்சி கொடுத்த திருநாள். இதனால் தைப்பூசம் தமயனுக்கு மட்டுமல்ல தந்தைக்கும் உரிய நாளாக முருக தலங்களுக்கு இனையாக சிவ தலங்களிலும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில்.
இங்கு தைப்பூச திருநாளில் தான் அப்பர், சம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயாச்சாரியார்களும், பட்டினத்தார், அகத்தியர், சிவவாக்கியர், நாரதர் வசிஷ்டர், கபிலர், கருவூத்தேவர், முப்பது முக்கோடித் தேவர்கள், அஷ்டவசுக்கள், எட்டு நாகங்கள், வருடன், வாயுவூ குபேரன், எமன், நான்கு வேதங்கள், பனிரெண்டு சூரியர்கள், சந்திரன், அக்னி, ஐராவதம், இந்திரன், லட்சுமி, சரஸ்வதி, துர்கா தேவி, விஷ்ணு, பிரம்மா, முருகப்பெருமான் எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்தை காத்து நிற்கும் அன்னை பார்வதி தேவி ஆகியோர் திருவிடைமருதூர் மகாலிங்க சாமியை பணிந்து வணங்கி தான் வரம் வாங்கி தான் இந்த பெரும் பேறு பெற்றார்கள் என்கிறது,
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
மூவா முதல்வ முக்கட் தேவ திருவிடை மருதா
மாசறு சிறப்பின் வானவர் ஆடும் பூசத் தீர்த்தம்
புரக்கும் பொன்னி அயிரா வணத்துறை சூடும் அப்ப கைலாய வாண கெளரி நாயக நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து பெரும் பதம் பிழையா வரம் பல பெற்றோர்.. என பட்டினத்தார் பாடுகிறார்.
10 நாள் விழாவில் தேர் வீதியுலாவும் திருவிடைமருதூரில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சம்பந்தர் தைப்பூசத்தின் சிறப்புகளை குறிப்பிட்டு பதிகம் பாடியுள்ளார். இந்த திருத்தலத்தில் தான் தைப்பூசம் திருநாளில் நாகம் தீண்டி உயிரிழந்த பூம்பாவையை உயிர் பித்தார் ஞானசம்பந்தர்.
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பூசு நீற்றான், கபாலீச்சுரம் அமர்ந்தான்
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசும் காணாதே போதியோ? பூம்பாவாய்!
இந்த பதிகத்தில் ஞானசம்பந்தர் , மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்து கொண்டாடும் தைப்பூச விழாவை காணாது மயிலையை விட்டு சொல்வது முறையோ என்று பாடுகிறார்.
தைப்பூசத்தன்று அனேக இல்லங்களில் சர்க்கரை பொங்கல் செய்து வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது இது ஞானசம்பந்தர் காலத்திற்கு முற்பட்டது என இதன் மூலம் அறியமுடிகிறது.
இவ்வாலயத்திலும் தைப்பூசம் திருவிழா சிறப்புற கொண்டாடப்படுகிறது போன்ற என்னற்ற சிறப்புகளை கொண்டது தை மாத பூசம் நட்சத்திரம் கூடிய பெளர்ணமி திருநாள்.