இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்தரின் சரண்யா சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது கணவர் சிவராமன், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக செயல்படுவது பலரையும் ஈர்த்துள்ளது.
கணவன் மனைவி இருவரும் ஒரே துறையில் பணியாற்றுவது இப்போது இயல்பானதாகி விட்டது. சாதாரணத் தொழில்களிலிருந்து, ஆசிரியர்களாக, டாக்டர்கள், என்ஜீனியர்களாக, காவல்துறை அதிகாரிகளாக, ஐஏஎஸ் அதிகாரிகள் என அனைத்து நிலைகளிலும் இணைந்து பணியாற்றும் தம்பதிகளை அதிகமாகவே காண முடியும்.
அந்த வகையில் வேலூர் மாவட்ட மக்கள், தங்களது மாவட்ட எஸ்பி மற்றும் மாநகராட்சி ஆணையரைப் பார்த்து பெருமிதம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்தரின் சரண்யா நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேலூர் மாவட்ட எஸ்பியாக அவரது கணவர் சிவராமன் ஏற்கனவே பணியாற்றி வருகிறார்.
இதன் மூலம் வேலூர் மாவட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான நிகழ்வாக, கணவன் மற்றும் மனைவி இருவருமே ஒரே மாவட்டத்தில் முக்கிய உயர் பொறுப்புகளில் பணியாற்றவுள்ளனர்.
2021-ஆம் ஆண்டு ஒரே பேட்ச் சிவில் சர்வீஸ் அதிகாரிகளான இந்த தம்பதி, ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் தங்களது சிறந்த சேவையாற்றியுள்ளனர். கேத்தரின் சரண்யா இதற்கு முன்பு பொள்ளாச்சி சப்-கலெக்டராகவும், தொடர்ந்து சென்னை சிப்காட் (SIPCOT) நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சேலம் வடக்கு துணை காவல்துறை ஆணையராக பணியாற்றியுள்ளார் சிவராமன். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கேத்தரின் சரண்யா, எம்எஸ்சி படித்து பின்னர் ஐஏஎஸ் முடித்தவர்.
ஒரே மாவட்டத்தில் கணவன் எஸ்பி-யாகவும், மனைவி மாநகராட்சி ஆணையராகவும் இணைந்து பணியாற்றவுள்ளது வேலூர் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.