வேப்ப மரம்

Su.tha Arivalagan
Mar 03, 2026,11:59 AM IST

- ஆனந்தி. ச


வேப்ப மரத்தின் கீழே உட்கார்ந்திருந்தபோதும் காத்தடித்த பொழுதும் கதிரவன் தாத்தாவிற்கு வேர்த்தது.. தோளில் தொங்கிய துண்டை எடுத்து முகத்தை துடைத்தபடியே பலமான யோசனையில் இறங்கினார்.


அவரும் அவர் குடும்பமும் இந்த வீட்டிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது ..  குடிவந்த மூன்று நாட்களில் வாக்கிங் சென்ற தாத்தா சின்ன கன்றாக இருந்த அதை வாசலில் நட்டார்.


கதிரவன் தாத்தாவிற்கும் அவரது மனைவிக்கும் செடிகள் நடவும் பராமரிப்பதும் மிகப்பிரியம். வீட்டிற்கு முன் வேப்பங்கன்றுடன் கூடவே பவளமல்லி செடி செம்பருத்தி ,நந்தியாவட்டை செடிகளை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்துவந்தனர்.


வேப்பமரம் சிறிது வளரவே .வீட்டின் மாடியில் டைல்ஸ் பதிக்கும் வேலை நடைபெற்றுவந்ததால் , இந்த மரத்தின் கீழ் உட்கார திண்ணை போன்ற அமைப்பில் டைல்ஸ் அவர்களின் ஆசைக்கிணங்க மகனால் பதித்து தரப்பட்டது. அந்திசாயும் நேரத்தில் அதனடியில் கதிரவன் தாத்தாவும் அவரது மனைவியும் அமர்ந்திருப்பது வழக்கம். மாலையில் அது வீசும் காற்றை ரசித்தபடியும், வீதியில் போகிறாவர்களை விசாரித்தபடியுமாக இருப்பது அவர்களின் தினசரி பொழுதுபோக்காயிற்று.




ரோடு போட வந்தவர்களாகட்டும். டெலிபோன் பள்ளம் எடுப்பவர்களாகட்டும் , சாக்கடை பள்ளம் எடுப்பவர்களானாலும் , அந்த தெருவில் எந்த வீட்டில் வேலை நடந்தாலும்  இந்த திண்ணையில் அமர்ந்து ,இந்த வேப்பமரக்காற்றை வாங்காமல் செல்லமாட்டார்கள்.


கடும் மழை புயலிலும் வளைந்து கொடுத்து வளமாய் கம்பீரமாக காட்சியளித்தது அந்த வேப்பமரம். சில சமயங்களில் மின்சாரத்துறையை சேர்ந்தவர்கள், மின்கம்பியை மரக்கிளையை தொடும்போது வெட்டுவதுண்டு , அந்த நேரத்தில் தாத்தாவோ பாட்டியோ பதறி வந்து,” கொஞ்சம் பார்த்துவெட்டுங்கப்பா” என பதபதைப்பதுண்டு.


கோடைக்காலமென்றால் , அதிலிருந்து வரும் வேப்பம்பூ வாசம் அத்தெருவையே மணக்கச்செய்யும் ..  கதிரவன் தாத்தாவின் வெள்ளை வேட்டி மரத்தடியில் பாட்டியால் விரிக்கப்பட்டு பூக்கள் சேமிக்கப்படும்.  அந்த தெருவில் இருக்கும் அனைவருக்கும் அது பகிர்ந்தளிக்கப்படும்.


வேப்பம்பழங்களை சாப்பிட வரும் பறவைகளின் வருகையால் மரமே அழகுறும். பழங்களை தாத்தாவும் பாட்டியும் பறித்து சாப்பிடுவதுடன் வழிப்போக்கர்களை பார்த்து, “இந்த பழம் உடலுக்கு நல்லது சாப்பிடுங்க “என்று கூறி பறித்தும் தருவார்கள்.


பின்னர் வேப்பங்கொட்டைகளை பொறுக்கும் தாத்தா அதை வைத்து வேப்பெண்ணெய்யும் ஆட்டுவதுண்டு. இலையுதிர் காலத்தில் இலைகளை கூட்டி குமித்து எரிப்பார்கள். “இந்த புகை மிக நல்லது, கொசு வராது” என கேட்காமலேயே கூறுவார்கள். இது வருடா வருடம் நிகழக்கூடிய நிகழ்வுகள்.


ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து இறந்துவிட்டார். தாத்தாவோ தனிமையானார் .. அவர் வேப்பமரத்தடியில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பார். அந்த வேப்பமரத்துடன் அவர் உரையாடிக்கொண்டிருப்பதையும் காணமுடியும்.


அந்த தெருவில் பாதாள சாக்கடை போடுவதற்காக அத்திண்ணையை அகற்றும்படியும் மரத்தை வெட்டும்படியும் தாத்தாவின் பையனிடம் தெரிவிக்கப்பட்டது.  பையன் தாத்தாவிடம் கூறியதும் தாத்தாவின் கண்ணீரை அடக்கமுடியவில்லை . “ ஏம்பா ? அதை வெட்டிதான் ஆகனுமா? வெட்டாமல் செய்யமுடியாதா? எனக்கேட்க 


“ அப்பா அதை வெட்டலேன்னா பாதி ரோட்லேர்ந்துதான் சாக்கடை போடணும்.” எப்படியும் வெட்டுவாங்க .. 

“அது ரோட்லதானே இருக்கு? அத வெட்டுவதுதானே நியாயம் “  என்றவனை கண்கொட்டாமல் பார்த்தார் தாத்தா.


மறுநாள் இந்த வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருந்தவருக்கு வியர்வை துடைக்க துடைக்க வந்தது.  “உன்னை என் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டோமே”. 


என் கண் முன்னே என் குழந்தையை வெட்டுவதை நான் எப்படி தாங்கப்போறேனோ தெரியலையே? அன்று முழுதும் புலம்பியபடியே தாத்தா .. அவர் சொல்வதை ஆமோதிப்பதுபோல  வேப்பமரத்தின் கிளைகள் மேலும் கீழும் ஆடின. மறுநாள் காலை காபி குடிக்க இன்னும் வராத தாத்தாவை தேடிபோன மருமகள் , பெட்டிலேயே தாத்தா வாய் திறத்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதை பார்த்தவள் கணவனை அழைக்க .


தாத்தா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கேயே உயிர் போனதும் . உடல் வீட்டிற்கு வரும் வேளையில் ,நகராட்சியிலிருந்து மரத்தை வெட்டுவதற்காக ஆட்கள் வந்திருந்தனர். 


தாத்தாவின் மகன் அவர்களிடம் “அவரோட இறுதி சடங்கு முடிஞ்ச உடனே வெட்டுங்களேன், பிளீஸ்”” என கையெடுத்து கும்பிட , வந்தவர்களோ ,”நாங்க ஒன்னும் கொடுமைக்காரர்கள் இல்லைபா. காரியம் எல்லாம் முடியட்டும் பொறுமையா வெட்டிக்கலாம் . திண்ணையும் அப்புறமாய் எடுத்துக்கலாம் “ எனக்கூறி சென்றார்கள்.


மழை தூற, தூறல் மரத்தின் மீது விழுந்து .. மரம் விடும் கண்ணீராய் கீழே விழுந்தது.


(ஆனந்தி ச, பட்டாதாரி ஆசிரியர் ( ஆங்கிலம்), அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)