சட்டப் போராட்டத்தின் முதல் அடி.. வேரில் இருந்து விழுது வரை (10)
- கவிஞர் கே.பிரியங்கா
காவல் நிலையத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரி தெரிவித்ததும், பொன்னுவேலும் செல்லதுரையும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இத்தனை நாள் உழைத்துச் சம்பாதித்து, சொந்தமாக வாங்கிய சொத்தைக்கூட தங்களால் மீட்டெடுக்க முடியவில்லையே என்ற வேதனை இருவரின் மனதையும் வாட்டியது. அடுத்து என்ன செய்வது? யாரை அணுகுவது? எப்படித் தங்களுடைய சொத்தை மீட்பது? என்ற கேள்விகளோடு ஊருக்குத் திரும்பினர்.
நம்பிக்கையிழந்து நின்ற அந்த நேரத்தில், ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்று அவர்களைத் தேடி வந்தது.
ஒருநாள், பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் பொன்னுவேலின் டீக்கடைக்கு வந்திருந்தார். பேச்சுவாக்கில் அவர்களுடைய சொத்துப் பிரச்சினையைப் பற்றித் தெரிந்துகொண்ட அவர்,
“பெரியகுளத்தில் பத்மநாதன் என்று ஒரு வழக்குரைஞர் இருக்கிறார். அவர் திறமையானவர். உங்கள் பிரச்சினையை அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுடைய சொத்தை மீட்க அவர் சரியான வழியைக் காட்டுவார்” என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறினார்.
அந்த வார்த்தைகள் பொன்னுவேலுக்கும் செல்லதுரைக்கும் இருண்ட பாதையில் தெரிந்த வெளிச்சமாக அமைந்தன.
மறுநாளே இருவரும் பெரியகுளத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். வழக்குரைஞர் பத்மநாதனைச் சந்தித்து, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் எடுத்துரைத்தனர். தாங்கள் பட்ட கஷ்டங்கள், சொத்தை வாங்கிய விதம், அதை காலி செய்து தருவதாகக் கூறியவர் பின்னர் மறுத்தது என எல்லா விவரங்களையும் விளக்கினர்.
அவர்கள் கொடுத்த பத்திரங்களையும் ஆவணங்களையும் பொறுமையாகப் படித்துப் பார்த்த வழக்குரைஞர், இறுதியில் நிதானமாகப் பேசினார்.
“முதலில் எதிர்த்தரப்பினருக்கு ஒரு பதில் நோட்டீஸ் அனுப்புவோம். அதற்கு அவர்கள் என்ன பதில் அளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். அதன் பிறகு சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யலாம்” என்றார்.
அந்த வார்த்தைகள் பொன்னுவேலுக்கு ஓரளவு ஆறுதலை அளித்தன.
“சரி ஐயா, நீங்கள் சொல்வதுபோலவே செய்வோம்” என்று கூறிவிட்டு இருவரும் ஊருக்குத் திரும்பினர்.
மறுநாளே வழக்குரைஞர் மூலமாக அந்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுவரை தங்களால் முடிந்த வழிகளில் முயற்சி செய்து பார்த்தவர்கள், இப்போது சட்டத்தின் கதவைத் தட்டத் தொடங்கியிருந்தனர்.
ஒருபுறம் சொத்துப் பிரச்சினை மனதை அரித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் பொன்னுவேலின் டீக்கடை நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களின் வருகை, கடையின் அன்றாட வேலைகள் என வாழ்க்கை ஒருபக்கம் நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால், வெளியில் சிரித்துக்கொண்டு வேலை செய்தாலும், உள்ளுக்குள் பொன்னுவேலின் மனம் நிம்மதியின்றித் தவித்தது.
ஒருநாள் செல்லதுரை தாத்தாவிடம் தன் மனக்குமுறலை அடக்க முடியாமல் கொட்டித் தீர்த்தார்.
“என்ன மாமா, என் குடும்பத்துக்கு மட்டும்தான் இப்படிச் சோதனை மேல் சோதனையா வரணுமா? ஒரு பிரச்சினை முடிவதற்குள் இன்னொரு பிரச்சினை வந்து நிக்குது. கஷ்டப்பட்டு உழைச்சு ஒரு சொத்தை வாங்கினா, அதையும் நிம்மதியா அனுபவிக்க முடியல. குடும்பத்தைக் காப்பாத்தப் போராடுறதா, சொத்தை மீட்கப் போராடுறதா? எத்தனை நாளைக்குத்தான் இப்படியே போராடிக்கிட்டிருக்கிறது?” என்று கண்களில் கண்ணீர் மல்கக் கேட்டார்.
அது வெறும் வார்த்தைகளல்ல; வாழ்க்கை முழுவதும் சுமந்துவந்த வலியின் வெளிப்பாடு.
தொடர்ந்து வந்த துன்பங்கள் ஒரு மனிதனின் உடலை மட்டுமல்ல, மனதையும் எவ்வளவு தூரம் சோர்வடையச் செய்யும் என்பதற்கு பொன்னுவேலின் நிலையே சாட்சி.
அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்ட செல்லதுரை தாத்தா, வழக்கம்போல அவருக்கு ஆறுதல் கூறினார்.
“ஏன்யா, எதற்கும் இப்படி மனசை உடைச்சுக்காதே. நம்மால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறோம். இப்போ சட்டப்படி முயற்சி செய்கிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு இரு. நீ தளர்ந்துபோனால் குடும்பத்தை யார் தாங்கிப் பிடிப்பது?” என்று அன்போடு எடுத்துரைத்தார்.
தாத்தாவின் வார்த்தைகள் பொன்னுவேல் தாத்தாவின் மனக்காயங்களுக்கு மருந்தாக அமைந்தன. பிரச்சினை தீர்ந்துவிடவில்லை; ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டிய மனவலிமை மட்டும் அவருக்குள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது.
நாட்கள் நகர்ந்தன…
ஒருநாள் எதிர்பாராத விதமாக வழக்குரைஞரிடமிருந்து ஒரு தந்தி வந்தது.
அதில், எதிர்த்தரப்பினருக்கு அனுப்பிய நோட்டீஸுக்குப் பதில் வந்திருப்பதாகவும், அதுகுறித்து விரிவாகக் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தந்தியைப் பார்த்ததும் என் தாத்தா பொன்னுவேலின் மனம் படபடக்கத் தொடங்கியது.
"அவர்கள் என்ன பதில் கொடுத்திருப்பார்கள்? நம்முடைய உரிமையை ஏற்றுக்கொண்டிருப்பார்களா? இல்லை, இன்னும் ஏதாவது புதிய சிக்கலை உருவாக்கியிருப்பார்களா?”
கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக மனதிற்குள் எழுந்தன.
ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியுமா? அல்லது நீதிமன்றத்தின் படியேறி, சட்டத்தின் வழியாகவே தன்னுடைய உரிமைக்காகப் போராட வேண்டுமா?
எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் பொன்னுவேலின் மனம் அலைபாய்ந்தது.
அவருடைய வாழ்க்கையில் இதுவரை சந்தித்த சோதனைகள் போதாதென்று, இப்போது இன்னொரு திருப்பம் காத்திருந்தது. ஒருபுறம் குடும்பத்தின் எதிர்காலம்; மறுபுறம் கஷ்டப்பட்டு வாங்கிய சொத்தின் மீதான உரிமை. இரண்டையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருடைய தோள்களில் கனமாகச் சுமந்துகொண்டிருந்தது.
அன்று இரவு அவருக்கு உறக்கம் வந்திருக்குமா?
மறுநாள் சூரியன் உதிக்கும்போது ஒரு நல்ல செய்தி பிறக்குமா? அல்லது அந்தச் சூரியனின் ஒளியைக்கூட மறைக்கும் அளவுக்கு புதிய சிக்கல்கள் உருவாகுமா?
அடுத்த நாள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய விடியலாக அமையுமா? அல்லது விடியாத இரவாகவே தொடருமா?
அதற்கான விடையைத் தெரிந்துகொள்ள நாம் காத்திருப்போம்…
(தொடரும்)
(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)