தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னை: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உயரிய நோக்கில், 'வெற்றி தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் மிக விமரிசையாகத் தொடங்கியது. முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகின.
இந்த மாநாட்டின் ஒரு முக்கிய பகுதியாக, பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராவயலட் (Ultraviolette), தமிழ்நாட்டில் தனது பெரிய அளவிலான உற்பத்தி ஆலையை அமைக்க முன்வந்துள்ளது. கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் பிரம்மாண்ட உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ரூ.779 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலையின் காரணமாக சுமார் 4,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அரசு அதிகாரிகளுக்கும் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே முறைப்படி பரிமாறிக் கொள்ளப்பட்டது.
தொழிற்துறையில் அடுத்தகட்டப் பாய்ச்சல்
தமிழ்நாடு தற்போது மின்சார வாகன உற்பத்தியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் அமையவுள்ள அல்ட்ராவயலட் நிறுவனத்தின் புதிய ஆலை, தமிழ்நாட்டின் இ-வேகன (EV Hub) கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் ரூ.67,452 கோடி மதிப்பில் கையெழுத்தாகியுள்ள 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி வேகம் பெறும் என்றும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த தொடர் முயற்சிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.