இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

Su.tha Arivalagan
Sep 09, 2025,08:04 PM IST

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் (துணை ஜனாதிபதி) தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இவர் 452 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும், இத்தேர்தலில் போட்டியிட்டர். ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்ததால் இந்த தேர்தல் நடந்தது. 




சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். பாஜகவில் தீவிரமாக ஈடுபட்டவர். முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் எம்.பி. என பல பதவிகளை வகித்தவர். ஆளுநராகவும் இருந்துள்ளார். தற்போது மகாராஷ்டிராவின் கவர்னராக இருக்கிறார். சுதர்சன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. இந்த முறை இரு வேட்பாளர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.


துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் electoral college-ல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றனர். மேலும் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களும் electoral college-ல் இடம் பெற தகுதியுடையவர்கள். எனவே, அவர்களும் தேர்தலில் பங்கேற்றனர்.


இந்த நிலையில் காலை தொடங்கி நடைபெற்ற வாக்குப் பதிவு மாலையில் முடிவடைந்தது. இதையடுத்து 15வது துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலின் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மொத்தம் 452 ஓட்டுக்கள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளரான பி.சுதர்சன ரெட்டி 300 ஓட்டுக்கள் பெற்று தோல்வியைச் சந்தித்தார்.