சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!

Su.tha Arivalagan
Aug 19, 2025,03:45 PM IST

டெல்லி : 2026ல் நடக்க இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காகவும், திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதற்காகவும் ஆர்.எஸ்.எஸ்., பின்புலத்தை கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனை, தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது.


சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை பாஜக அறிவித்ததும் திமுக.,வும் பாராட்டியது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் முதல் ஆளாக தனது ஆதரவை தெரிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து தமிழக எம்.பி.,க்களும் ஆதரவு தர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கேட்டுக் கொண்டார். இதனால் திமுக என்ன செய்ய போகிறது என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டது.




ஒரு வேளை சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காவிட்டால் தமிழ் இன எதிரி என திமுக.,விற்கு எதிராக பாஜக, அதிமுக கட்சிகள் விமர்சித்து, பிரச்சாரம் செய்ய துவங்கி விடும். அதை தவிர்க்க சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவு அளித்தால், காங்கிரஸ் தலைமையின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இதனால் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும். தமிழக காங்கிரஸ் கட்சி, விஜய்யுடன் கூட்டணி வைக்கும் முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி சென்றால் அது திமுக.,விற்கு நெருக்கடியாக அமையும். மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற திமுக.,வின் கனவு தவிடு பொடியாகும். வரும் சட்டசபை தேரதலில் திமுக.,வை வீழ்த்துவது எளிதாகி விடும் என கணக்கு போட்டது பாஜக.


ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஆந்திராவை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை, இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பாஜக தலைமைக்கு "ஷாக்" கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை.  அதாவது திமுக கூட்டணிக்கு தேஜகூ வைத்த ஆப்பை, அப்படியே பாஜக பக்கமே திருப்பி விட்டுள்ளது காங்கிரஸ். சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக பாஜக அறிவித்ததும் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடு இப்போது என்ன செய்ய போகிறார்? தெலுங்கு மொழி பேசுபவர் என்ற மொழி பற்று அடிப்படையில் சுதர்சன ரெட்டியை ஆதரிப்பாரா அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர் என்ற முறையில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிப்பாரா?


ஒருவேளை சந்திரபாபு நாயுடு, சுதர்சன ரெட்டியை ஆதரித்தால் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும். பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறினால் லோக்சபாவில் பாஜக பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால் துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைவதுடன், ஆட்சிக்கே நெருக்கடி ஏற்படலாம். அப்படி இல்லாமல் சந்திரபாபு நாயுடு, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்தால் ஆந்திராவில் அவரது செல்வாக்கு சரியும். தெலுங்கு மொழி பேசுபவர்களின் எதிர்ப்பை பெற வேண்டிய நிலை ஏற்படும். 


இப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் திமுக எடுக்க போகும் முடிவில் தான் மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி தொடர முடியும். இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய அளவில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.