வியட்நாமில் பரிதாபம்.. சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 15 இந்தியர்கள் பலி

Su.tha Arivalagan
Jul 11, 2026,04:53 PM IST

ஹனோய்: வியட்நாம் நாட்டில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இந்த விபத்தில் 15 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழர்களும் அடக்கம் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 'பூ குவாக்' (Phu Quoc) தீவு அருகே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்ற பயணிகள், அங்குள்ள கடற்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்துக்குள்ளான அந்தப் படகில் மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 3 ஊழியர்களும் என மொத்தம் 35 பேர் பயணித்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணத்தின் போது எதிர்பாராத விதமாக படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததும் அருகில் இருந்தவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.


18 பேர் மீட்பு - தேடுதல் பணி தீவிரம்:




விபத்து நடந்தவுடன் விரைந்து செயல்பட்ட மீட்புப் படையினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 18 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், படகில் பயணித்த மீதமுள்ள நபர்களின் நிலை என்னவென்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. கடலில் காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணியில் வியட்நாம் கடற்படையினரும், உள்ளூர் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான இந்த படகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களும் இருந்துள்ளனர் என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விபத்து குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் வியட்நாம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவசர உதவி எண்கள் (Helpline Numbers) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் அறிய அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:


+84 362817930

+84 915523714

+84 334520414


மேலும், வியட்நாம் தலைநகர் ஹனோயில் இதற்கென பிரத்யேகக் கட்டுப்பாட்டு மையம் (Control Room) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை +84 913089165 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடலில் காணாமல் போனவர்களைப் பத்திரமாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.