நூறு சாமி படப்பிடிப்பு.. கள்ளக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் கேம்ப் அடிக்கும் விஜய் ஆண்டனி!

Su.tha Arivalagan
Dec 06, 2025,10:07 AM IST

- சுமதி சிவக்குமார்


கள்ளக்குறிச்சி: நடிகர் விஜய் ஆண்டனி தனது பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அந்த படத்தில் வரும் பாடலின் முதல் சொல்லை வைத்து நூறு சாமி என்ற படம் எடுக்க முடிவு செய்து தற்போது அதில் மும்முரமாகியுள்ளார்.


இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் பாடகராகவும் கலக்கியவர் விஜய் ஆண்டனி. இதைத் தொடர்ந்து நடிகராகி விட்ட அவர் தொடர்ந்து தனது படங்களுக்கும் தானே இசையமைத்தும் வருகிறார். நடிப்பில் தீவிரமாக உள்ள அவருக்கு பிச்சைக்காரன் படம் மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. 


அந்தப் படத்தில் இடம் பெற்ற நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் என்ற பாடல் மிகப் பிரபலமானது. தமிழின் தலை சிறந்த தாய் பாடல்களில் அதற்கும் இடம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அந்தப் பாடல் வரியை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி.




அதற்காக அழகான கிராமப் பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டார். தனது நண்பர் ஒருவர் சொன்னதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுற்று பகுதிகளில் முதல் படப்பிடிப்பு துவக்கினார். சங்கராபுரம் வட்டம் சுற்றிய கிராமங்களான வளையாம்பட்டு, பூட்டை, நெற்குணம், விரியூர், அரசம்பட்டு , தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை என கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 


இன்னும் கல்வராயன் மலை, கோமுகி டேம், பெரியார் நீர்வீழ்ச்சி, ஆன்மீக தலங்கள் என தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும் என்று நூறு சாமி படப்பிடிப்பு குழு தெரிவித்துள்ளது.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)