அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு

Su.tha Arivalagan
Jul 13, 2025,04:09 PM IST
சென்னை: அஜீத் குமார் குடும்பத்திடம் ஸாரி கேட்டது போல, உங்க ஆட்சிக்காலத்தில் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த 24 பேரோட குடும்பத்திடமும் ஸாரி சொல்லுங் சிஎம் சார் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில் விஜய் தலைமையில் தவெக சார்பில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது விஜய் ஆவேசமாக பேசினார். அவரது முதல் போராட்டக் கள பேச்சு இது என்பதால் பலரும் இந்தப் பேச்சை எதிர்பார்த்திருந்தனர்.

பரந்தூர் போராட்டக் களத்தில் அவர் பேசியது போல இன்றும் கூட ஆவேசமாக பேசினார். விஜய் பேச்சிலிருந்து:



திருப்புவனம் அஜீத்குமார் சாதாரண கோவில் காவலாளி. அவரை போலீஸ் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்து விட்டார். அவரது குடும்பத்தினரிடம் நம்மோட முதல்வர் சாரி சொன்னார். தப்பில்லை. அத்தோடு இதையும் சேர்த்துப் பண்ணுங்க சிஎம் சார். உங்களுடைய ஆட்சிக் காலத்தில் இதே மாதிரி போலீஸ் விசாரணையில் 24 பேர் இறந்து போயிருக்காங்க. அந்த 24 பேரோட குடும்பத்துக்கும் சாரி சொல்வீங்களா.. தயவு செய்து சாரி சொல்லிருங்க. அஜீத் குமார் குடும்பத்துக்கு தந்த நிவாரணம் போல 24 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் கொடுப்பீங்களா. தயவு செய்து அந்த நிவாரணத்தையும் கொடுத்துருங்க. 

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபோது, அது தமிழ்நாடு காவல்துறைக்கு அவமானம்னு சொன்னீங்க. இன்று நீங்க உத்தரவிட்டிருப்பதற்கு பேரு என்னங்க சார்.. அதேதானே.. அதே சிபிஐதானே. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கைப்பாவையாகத்தான் சிபிஐ இருக்கு. ஏன் நீங்க அங்க போய் ஒளிஞ்சிருக்கீங்க.

அதுக்குக் காரணம், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் புலனாய்வுக் குழுவை அமைக்க நாம கேட்டிருக்கோம். அதனால்தான் மத்திய அரசு பின்னால் போய் ஒளிஞ்சிருக்கீங்க. அண்ணா பல்கலைக்கழகம்  முதல் அஜீத் குமார் மரணம் வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தான் தலையிட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கு. எல்லாத்துக்கும் நீதிமன்றம்தான் தலையிட வேண்டும் என்றால், பிறகு நீங்க எதுக்குங்க சார், ஆட்சி எதுக்கு சார்,  சிஎம் பதவி எதுக்குங்க சார்.

விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

எப்படிக் கேள்வி கேட்டாலும் உங்க கிட்ட இருந்து பதில் வராது. இருந்தாதானே வரும். உங்களிடமிருந்து மேக்ஸிமம் வரக் கூடிய பதில் சாரி மா, தெரியாம நடந்திருச்சுமா, இப்படி நடந்திருக்கக் கூடாதுமா. அதுதானே.. வெற்று மாடல் திமுக அரசு, இப்போது சாரி மா சர்க்கார் மாடலா மாறிருச்சு. 

இந்த செயலற்ற அரசு ஆட்சியை விட்டுப் போவதற்குள் சட்டம் ஒழுங்கை நீங்க சரி செஞ்சே ஆகணும். இல்லாவிட்டால் மக்களோடு மக்களாக நின்று உங்களை சரி செய்ய வைப்போம். அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும் என்றார் விஜய்.

விஜய் போராட்டம் நடத்திய மேடையில் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினரும் இணைந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.