ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தவிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றிய போதும் விஜய்யால் முதல்வராக பதவியேற்க முடியவில்லை. தவெக ஆட்சி அமைக்க எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தாலும், பெரும் குழப்பமான சூழலே தொடர்கிறது.
மே 7ம் தேதியான இன்று முதல்வராக பதவியேற்று விட்டு, ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கவர்னரிடம் கூறி இருந்தார் தவெக தலைவர் விஜய். ஆனால் ஆதரவு எம்எல்ஏ.,க்களின் விபரங்களை முழுமையாக தராமல் ஆட்சி பொறுப்பேற்க முடியாது என கவர்னர் தரப்பில் கூறப்பட்டு விட்டது.
சட்டப்படி பார்த்தால் இப்படி ஆளுநரால் கூற முடியாது என்று சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட முடியும். அதைத் தாண்டி அவர் ஆட்சியமைப்பதிலிருந்து கட்சிகளை தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்ற உத்தரவுகள் பல உள்ளன. ஆனால் ஆளுநர் ஏன் முட்டுக்கட்டை போடுகிறார் என்று தெரியவில்லை.
இதற்கிடையில் 5 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள காங்கிரஸ், தவெக.,விற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. 234 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், பதவியேற்பதற்கு முன் அவர் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி வரும்போது, தவெக, பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு இருந்தால் போதும்.
தற்போது தவெக 108, காங்கிரஸ் 5 என மொத்தம் 113 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் இன்னும் 4 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவை. தவெக ஆதரவு கேட்டுள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ளன. ஆனால் இவர்கள் மூவரும் கடைசி நிமிடத்தில் தங்களின் முடிவை ஒத்திவைத்து மே 8ம் தேதி ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்க போவதாக சொல்லி விட்டனர்.
மற்றொரு புறம் அதிமுக ஒருபோதும் தவெக.,விற்கு ஆதரவு அளிக்காது என ஓ.எஸ்.மணியன் கூறிக் கொண்டிருக்கையில், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தவெக.,விற்கு ஆதரவு தரும் முடிவில் சி.வி.சண்முகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மொத்த அதிமுக எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமியுடன்தான் உள்ளனர். வெயில் காலம் என்பதால் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
மற்றொரு புறம், தவெக.,விற்கு பெரும்பான்மை இல்லாததால் திமுக-அதிமுக இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க போவதாக ஒரு தகவல் வேறு பரவலாக பேசப்பட்டு வந்தது. அதுவும் வதந்தி என்று பின்னர் உறுதியாகி விட்டது. அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. அப்படி நடந்தால் அது தற்கொலை முயற்சியாகவே இருக்கும்.
தற்போதைய சூழலில் விஜய் ஆட்சியமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். அப்படி அனுமதிக்கப்பட்டால், அவர் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அது முடியாமல் போனால், அடுத்து யாராவது ஆட்சியமைக்க முன்வர வேண்டும். யாரும் வராவிட்டால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும். அது ஆறு மாதம் வரை நீடிக்கலாம். அதற்குள் யாராவது பெரும்பான்மையை நிரூபிக்க முன்வந்தால் உண்டு. இல்லாவிட்டால் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்படும். இதுதான் நடக்க முடியும். இதைத் தாண்டி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.