விஜய்யின் ஜனநாயகன் படம் அவரது அரசியலுக்கு உதவுமா? மக்கள் ஆதரவை பெருக்குமா?
Jan 08, 2026,06:02 PM IST
சென்னை : நடிகர் விஜய்யின் ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படம், அவரது கடைசி படம் என சொல்லப்படுவதால் இது அவரது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. விஜய், முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால், தேர்தல் சமயத்தில் அவரது அரசியல் பயணத்திற்கும், அவரின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் பலம் சேர்க்கும் வகையிலான காட்சிகளும், வசனங்களும் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
வழக்கமாகவே விஜய் படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இது கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. படத்தின் ரிலீசிற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு, அது கோர்ட் வரை சென்றுள்ளது. படம் ரிலீசாக உள்ள ஜனவரி 09ம் தேதிக்கு முன்னதாக அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விடும் என நினைத்துக் கொண்டிருந்தால், வழக்கின் தீர்ப்பு பட ரிலீஸ் அறிவித்திருக்கும் ஜனவரி 09ம் அன்று தான் வழங்கப்படும் என கூறி, நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார். ஜனநாயகன் படம் எதிர்கொண்டுள்ள இந்த சர்ச்சை விஜய்யின் அரசியலுக்கும், அவரது கட்சி மக்களின் ஆதரவை பெறுவதற்கும் உதவுமா என்பதை பற்றி ஆராய்வோம்...
விஜய்க்கு கை கொடுக்குமா ஜனநாயகன் சர்ச்சை?
1. அரசியலுக்கு ஒரு "லாஞ்ச் பேட்" - இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகள் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் (TVK) கொள்கைகளை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக இருக்கும்.
MGR பாணி பிம்பம்: படத்தின் போஸ்டர்களில் "நான் ஆணையிட்டால்" போன்ற வாசகங்கள் மற்றும் MGR-ஐ நினைவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நற்பெயரை உருவாக்க உதவும்.
2. "சர்ச்சை" அவருக்குக் கை கொடுக்குமா? - திரையுலக வரலாற்றில் விஜய்யின் படங்களுக்கு வரும் எதிர்ப்புகள் அவருக்கு எப்போதும் சாதகமாகவே முடிந்துள்ளன. தற்போது ஜனவரி 9 (நாளை) வெளியாக உள்ள நிலையில், தணிக்கை குழு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாகவே படம் முடக்கப்படுகிறது" என்ற பிம்பம் உருவானால், அது மக்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு 'பாதிக்கப்பட்டவர்' (Victim) என்ற அனுதாபத்தை உருவாக்கி, அவருக்கு ஆதரவைத் தேடித்தரும்.
எதிர்ப்பே விளம்பரம்: இதற்கு முன் "தலைவா", 'மெர்சல்', 'சர்க்கார்' போன்ற படங்களுக்கு அரசியல் ரீதியாக வந்த எதிர்ப்புகள் அந்தப் படங்களை மாபெரும் வெற்றி அடையச் செய்தன. அதேபோல், இந்தப் படத்திற்கு வரும் சர்ச்சைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து, அரசியல் களத்தில் அவரைப் பற்றித் தொடர்ந்து பேச வைக்கும்.
3. சவால்கள் - இந்தப் படம் தெலுங்கின் 'பகவந்த் கேசரி' படத்தின் தழுவல் என்று கூறப்படுவது ஒரு சிறிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குனர் எச். வினோத் தமிழக அரசியலுக்கு ஏற்ப பல மாற்றங்களைச் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா மூலம் ஒரு அலையை உருவாக்கினாலும், தேர்தல் களத்தில் அந்த வாக்குகளை வெற்றியாக மாற்றுவதற்கு வலுவான பூத் கமிட்டி மற்றும் களப்பணிகள் அவசியம்.
ஜனநாயகன் திரைப்படம் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சிப் பிம்பத்தை நிச்சயம் தரும். படம் வெற்றி பெற்று, அதில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைந்தால், அது 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் எடுக்கும் அரசியல் முன்னெடுப்புகளுக்கு வலுவான அடித்தளமாக அமையும். ஒருவேளை ஜனவரி 09ம் தேதி வரப்போகும் தீர்ப்பு ஜனநாயகன் படத்திற்கு எதிராக அமைந்து, படத்தின் ரிலீஸ் இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்கள் தள்ளிப் போனாலும் அது மக்களுக்கு விஜய் மீது இருக்கும் அனுதாபத்தை அதிகரிக்க செய்யும்.
ஏற்கனவே கரூர் சம்பவ வழக்கில் விஜய் குறி வைக்கப்படுகிறார், அதை காரணமாக சொல்லி அவரது பிரச்சாரம் முடக்கப்படுகிறது என்ற கருத்து மக்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது படத்தை கூட ரிலீஸ் செய்ய விடாமல் கடைசி நேரத்தில் முடக்குகிறார்கள் என்ற கருத்து உருவாகும். ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர் பலரும் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இனி மக்களும் குரல் கொடுக்க துவங்கினால், அது விஜய்யின் இமேஜை வேற லெவலுக்கு உயர்த்தி விடும்.